உள்ளூர் செய்திகள்

ரத்ததான விழிப்புணர்வு; மாணவர்களுக்கு தேவை

திருப்பூர்: கல்லூரி மாணவர்கள் இடையே, ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆபத்தான நேரங்களில், உயிர் காக்க, ரத்தம் தேவைப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து, குறிப்பிட்ட வகை ரத்தம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. சமீபகாலமாக, கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு, அதிகரிக்கத் துவங்கியுள்ளது. எனினும், கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில், இதுதொடர்பாக, போதிய விழிப்புணர்வு இல்லை. முக்கிய தினங்களில், கல்லூரிகளில் நடத்தப்படும் முகாமில், குறைந்த மாணவர்களே பங்கேற்று, ரத்த தானம் செய்கின்றனர்; மற்றவர்கள், தீவிரம் காட்டுவதில்லை. பொது அமைப்புகளால் நடத்தப்படும் ரத்த தான முகாம்களில், பெரும்பாலும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்பதில்லை. கிராமப்புறம் சார்ந்த மாணவ, மாணவியர் மத்தியில், உடல் நலம் பாதிக்கும் என்ற, தவறான எண்ணம் உள்ளது. இதனால், ரத்த வங்கிகளில், முக்கிய வகை ரத்தம் இருப்பில் இல்லாத நிலை ஏற்படுகிறது; விபத்து காலங்களில், உயிருக்கு போராடுபவர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்துக்குள் ரத்தம் கிடைக்காத நிலை உண்டாகிறது. ரத்த வங்கிகளில் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, ரத்த தானவிழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு நடத்துவதோடு மட்டுமின்றி, கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில், ஆர்வத்தை தூண்டுவது அவசியம்; இதுகுறித்து, உயர்கல்வி துறை ஆலோசித்து, நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்