மருத்துவ இடத்திற்கு சிறப்பு கவுன்சிலிங்
புதுச்சேரி: அரசு மருத்துவ கல்லுாரியில் காலியான ஒரு மருத்துவ இடத்திற்கான சென்டாக் சிறப்பு கவுன்சிலிங் நேற்று நடந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, அகில இந்திய மருத்துவ கவுன்சில் நெறிமுறைகள்படி, செப்.30ம் தேதிக்குள் நிரப்பி இருக்க வேண்டும். புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரியில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் கடந்த 28ம் தேதி முடிந்தது.கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் 150 இடங்களில், சென்டாக்-135, அகில இந்திய ஒதுக்கீடு-14 இடங்கள் உட்பட 149 இடங்கள் மட்டுமே நிரம்பியது. ஒரு இடம் நிரப்பவில்லை. இந்த இடத்திற்கான சிறப்பு கலந்தாய்வு சென்டாக் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்ஆப் மதிப்பெண் 200 முதல் 179.66 வரை பெற்ற 713 மாணவ மாணவிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று காலை 9:00 மணிக்கு கவுன்சிலிங் துவங்கியது. இதில், 191 கட்ஆப் மதிப்பெண்களுடன் பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் படித்த மாகிபள்ளுர் பகுதி பாத்திமா இதாகி, அரசு மருத்துவ கல்லுாரியில் காலியான இடத்தை தேர்வு செய்தார். பிம்ஸ் கல்லுாரியில் காலியான இடத்தை, 190 கட்ஆப் மதிப்பெண்களுடன் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் பயின்ற மோனிஷா தேர்வு செய்தார். வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் காலியான எம்.பி.பி.எஸ்.,இடத்தை, 187.77 கட்ஆப் மதிப்பெண்களுடன் அரசு பல் மருத்துவ கல்லுாரியில் பயின்ற சாய் பிரவலிகா தேர்வு செய்தார். தற்போது அரசு மருத்துவ கல்லுாரியில் ஒரு பல் மருத்துவ இடம் காலியாக உள்ளது. இதற்கு நாளை (7ம் தேதி) கவுன்சிலிங் நடத்த சென்டாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்புவது தொடர்பாக ஐகோர்ட் உத்தரவு வெளியாகியதாவும், அதனால் நேற்று நிரப்பட்ட இடங்களில் சேர வேண்டாம் என சென்டாக் நிர்வாகம் கூறியதாக தகவல் பரவியது. சென்டாக் அதிகாரிகள் கூறுகையில், குழப்பங்கள் நீக்கப்பட்டது. மருத்துவ இடங்களை பெற்ற மாணவர்கள், இன்று (6ம் தேதி) மருத்துவ கல்லுாரியில் சேர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.