இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி பெற அழைப்பு
திருப்பூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அறிக்கை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, உதவித்தொகையுடன் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம். போலீஸ் பயிற்சி கல்லூரி மூலம், பாதுகாப்பு சேவை பணி குறித்த பயிற்சி தரப்படுகிறது. பயிற்சி, 21 நாட்கள்; எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். கட்டட தொழில் வளர்ச்சி கழகம் சார்பில், மேசன், டிரில்லர், பிளம்பர், பெயின்டர், எலக்ட்ரீசியன் போன்ற தொழில் பிரிவுகளில், பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டு மாதம் அளிக்கப்படும் இப்பயிற்சியில் சேர, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் சார்பில், சாப்ட் ஸ்கில் புரோகிராம் தரப்படுகிறது; ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அப்பேரல் டிரெயினிங் மற்றும் டிசைன் சென்டர் மூலம் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஸ்மார்ட் ஆப்ரேட்டர் பேசிக்-45 நாட்கள் பயிற்சி, ஸ்மார்ட் ஆப்ரேட்டர் அட்வான்ஸ்-15 நாட்கள் பயிற்சி; ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஸ்மார்ட் குவாலிட்டி செக்கர்ஸ்-30 நாட்கள் பயிற்சி, ஸ்மார்ட் சர்பேஸ் ஆர்மைன்டேசன்-30 நாட்கள் பயிற்சி, ஸ்மார்ட் மெஷின் டெக்னீஷியன்-45 நாட்கள் பயிற்சியில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிகளில் சேர விரும்புவோர், திருப்பூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.