பல்கலையின் மெத்தனம் விண்ணப்பதாரர்கள் அவதி
சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில், இப்பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு, மூன்று பேராசிரியர்; நான்கு இணை பேராசிரியர்; ஒன்பது உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தவிர, தட்டச்சர், டெலிபோன் ஆப்பரேட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப, நவ., 1ல் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி உள்ளிட்ட மற்ற விவரங்கள், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, பேராசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான விவரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. அதனால், இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிரமப்படுகின்றனர். இந்த விவரங்களை இணையதளத்தில் உடனே வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.