உள்ளூர் செய்திகள்

படிக்கும்போதே வேலைக்கு தயாராக வேண்டும்!

மதுரை: கல்லுாரியில் படிக்கும் போதே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வேலைக்கு தயாராகும் தகுதிகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும், என கோவை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.மதுரையில் தினமலர் நாளிதழ் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் (என்.ஐ.பி.,) இணைந்து கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தும் வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சியை என்.ஐ.பி., அலுவலகத்தில் அவர் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: வங்கி தேர்வுகளை நகர்ப்புற மாணவர்கள் தான் எழுத முடியும் என்ற எண்ணம் தகர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயனுள்ள இலவச பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.இது தான் என்னுடைய இலக்கு; அதை அடையவே என் பயணம், என்று உறுதிமொழியேற்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாது. கல்லுாரியில் படிக்கும் போதே வேலைக்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு மிக முக்கியம் பொது அறிவை வளர்த்துக்கொள்வது. இதற்கு அனைத்து பாடங்களிலும் அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருந்தாலே போதுமானது. அடுத்து,நடப்பு நிகழ்வுகளை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதற்கு நாளிதழ்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். குறிப்பெடுத்து படிப்பது நல்லது. ஆங்கிலத்தில் நன்கு தேர்ச்சி பெற நாள் ஒன்றுக்கு ஐந்து புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளலாம். இதுதவிர போட்டித் தேர்வுக்கான வினா வங்கியிலுள்ள வினாக்களுக்கு அடிக்கடி விடை எழுதி பார்க்க வேண்டும். அடுத்தடுத்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர வேண்டும். நம் ஒவ்வொரு சாதனையும் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும், என்றார்.என்.ஐ.பி., நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் பேசுகையில், மாணவர்கள் நலன் கருதி தினமலர் நாளிதழுடன் இம்முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. 2 ஆயிரம் பேருக்கு தகுதி தேர்வு நடத்தி மதிப்பெண் அடிப்படையில் 6 மாவட்டங்களில் 67 கல்லுாரிகளை சேர்ந்த 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கல்லுாரி முடித்து 21 வயதில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே இப்பயிற்சியின் குறிக்கோள், என்றார்.என்.ஐ.பி., முதன்மை ஆலோசகர் வெங்கடாசலபதி நன்றி கூறினார். வங்கி தேர்வு இலவச பயிற்சிக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை விஜயகார்த்திகேயன் வழங்கினார். தேர்வு பெற்ற நுாறு மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஞாயிறும் நான்கு மாதங்களுக்கு இலவச வகுப்பு நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்