பள்ளி கட்டடம் சீரமைப்பில் முறைகேடு!
திருவண்ணாமலை: செங்கம் அருகே, பள்ளி சீரமைப்பு பணி முறைகேட்டில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டதால், பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு, 250 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட, எட்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த பள்ளிக்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்திலும், ஏற்கனவே உள்ள, இரு பழைய கட்டடங்களிலும், மாணவ, மாணவியருக்கு வகுப்பு நடத்தப்பட்டு வந்தன. பழுதடைந்ததால் பழைய கட்டடங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதை இடித்து விட்டு, கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என கிராம மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள், மற்றும் கிராம கல்வி குழுவினர், கடந்த, ஓராண்டாக கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு பதிலாக, பழைய கட்டடத்தை, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க டெண்டர் விடப்பட்டு, கடந்த, ஒரு வாரமாக பணி நடக்கிறது. இதில், புதிய ஓடுகள் பொருத்தாமல், பழைய ஓடுகளுக்கு வர்ணம் பூசி, மீண்டும் பொருத்தினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணியை தொடரக் கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர்.