மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 1,483 எம்.பி.பி.எஸ்., இடங்கள், சென்னை பல் மருத்துவக் கல்லூரியில், 85 பி.டி.எஸ்., இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. பெருந்துறை ஐ.ஆர்.டி.,யில் 39, கோவை பி.எஸ்.ஜி.,யில் 97, கன்னியாகுமரி ஸ்ரீமூகாம்பிகையில் 50, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியில் 97 என மொத்தம் 283 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. மேலும் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 862 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. இப்படிப்பிற்காக 14 ஆயிரத்து 321 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். 384 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 937 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஜூன் 29ம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டார். www.tn.gov.in, www.tnhealth.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களது தரவரிசையை தெரிந்துகொள்ளலாம். மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திகா என்ற மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் பொறியியல் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். கார்த்திகா கூறுகையில், “மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க விரும்புகிறேன்,” என்றார். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், திருத்தப்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கவுன்சிலிங் அட்டவணைப்படி மூலச் சான்றிதழ்களுடன் வந்து கலந்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் கிடைக்காத மாணவர்களும், மூலச் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம். பின், அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியதாவது:மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஜூலை 6 முதல் 17ம் தேதி வரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கவுள்ளது. எட்டு மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், அவர் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்படும். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து விரைவில் அனுமதி கிடைத்துவிடும். திருவாரூர், விழுப்புரத்தில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை நடத்து அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கான கல்விக் கட்டணம் ஒரு வாரத்தில் தெரியவரும். மருத்துவ கவுன்சிலிங்கில் இடத்தைத் தேர்வு செய்த பிறகு, பொறியியல் படிப்பில் சேருபவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படாது. உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, பழைய கேள்வித்தாள் முறைப்படி, ஜூலை 19ம் தேதி நடைபெறும். இந்த ஆண்டு முதல் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பார்ம்., படிப்பில் கூடு தலாக 20 இடங்களும், மதுரை மரு த்துவக் கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் கூடுதலாக 25 இடங்களும் சேர்க்கப்படவுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி? தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் இன்னும் அனுமதி வழங்கவில்லை. மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு செய்திக்குறிப்பிலும், ‘இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங்கின்போது இடஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கவுன்சிலிங்கிற்கு முன்பாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைக்காவிட்டால், அக்கல்லூரியில் உள்ள 85 மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ரத்தாகும். அப்போது, மாநில அரசு ஒதுக்கீட்டில் 1,398 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மட்டுமே கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.