உள்ளூர் செய்திகள்

சென்னையில் பச்சையப்பன் இன்ஜினியரிங் கல்லூரி

காஞ்சிபுரம்: சென்னையில், அடுத்த கல்வியாண்டில் பச்சையப்பன் இன்ஜினியரிங் கல்லூரி துவக்கப்படும் என பச்சையப்பன் அறக்கட்டளைத் தலைவர் ஐசரி கே.கணேஷ் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பச்சையப்பன் அறக்கட்டளைக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், சிதம்பரம் ஆகிய இடங்களில் ஆறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஏழு பள்ளிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் அறக்கட்டளைக்கு சொத்துக்கள் உள்ளன. காஞ்சிபுரம், சீர்காழி, சிதம்பரம், ராமேஸ்வரம், கும்பகோணம், திருமுல்லைவாயல் பகுதியில் கோவில் கட்டளை சொத்துக்கள் உள்ளன. சென்னையில் அடுத்த கல்வியாண்டு பச்சையப்பன் இன்ஜினியரிங் கல்லூரி துவக்க உள்ளோம். பூந்தமல்லி ஹைரோடில் தற்போதுள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்திலேயே இன்ஜினியரிங் கல்லூரி துவக்கப்படும். இன்ஜினியரிங் கல்லூரி துவக்க நகர் உள்ளே ஐந்து ஏக்கர் நிலம் தேவை. தற்போதுள்ள 40 ஏக்கர் பரப்பளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. எனவே அதே வளாகத்தில் இன்ஜியரிங் கல்லூரி துவக்க தேவையான அளவு இடம் உள்ளது. தற்போது உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். கல்லூரிகளில் சுயநிதி படிப்புகள், முதுகலை பட்டப் படிப்புகள் துவக்க உள்ளோம். அறக்கட்டளை நிதி குறித்து கவலைப்படவில்லை. முன்னாள் மாணவர்களுக்காக புதிய இணையதளம் துவக்க உள்ளோம். அதன் மூலம் பழைய மாணவர்களை தொடர்பு கொண்டு நிதி திரட்ட உள்ளோம். அறக்கட்டளை சொத்து தொடர்பாக, பல்வேறு வழக்குகள் உள்ளன. அவற்றை அரசின் உதவியுடன் சட்டப்படி சந்திக்க உள்ளோம். கல்லூரிகளில் பி.சி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அறிவியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உட்பட வேலைவாய்ப்பு தரக்கூடிய படிப்புகள் துவக்கப்படும். அரசு விதிமுறைகளின்படி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அறக்கட்டளை கீழ் செயல்படும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து, தீர்த்து வைப்போம். புதிதாக பள்ளிகள் துவக்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ஐசரி கே.கணேஷ் தெரிவித்தார். அவருடன் அறக்கட்டளை நிர்வாகிகள் லோகநாதன், சரவணன், சிவசுப்பிரமணியம் ஆகியோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்