பொது நுாலகங்களில் தடுப்பூசி முகாம்
சென்னை: தமிழக பொது நுாலகத்துறை ஊழியர்களுக்கு, தடுப்பூசி முகாம் நடத்த, இயக்குனர் நாகராஜ முருகன் அனுமதி அளித்தார். முதற்கட்டமாக, சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நுாலகத்தில், நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. நுாலக ஊழியர்களும், அலுவலர்களும், நுாலகத்துக்கு வந்த வாசகர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசி போட வந்தவர்களுக்கு, முதலில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு பார்க்கப்பட்டு, அதன் பின், உடல்நிலைக்கு ஏற்ப தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை, நுாலக அலுவலர் கணேசன் செய்திருந்தார். இதேபோல, மற்ற பொது நுாலகங்களிலும், இது போன்ற தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.