இயக்குனர் பதவி ரத்துக்கு கண்டனம்
சென்னை: &'தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ரத்து செய்யப்படுவது வருத்தம் அளிப்பதாகும்&' என, பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ரத்து செய்யப்படுகிறது; இனி, அந்தப் பணிக்கான பொறுப்புகளை, பள்ளிக்கல்வி கமிஷனரே ஏற்று செயல்படலாம் என, தமிழக அரசு அறிவித்திருப்பது, வருத்தம் அளிக்கக் கூடியது. பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி என்பது, அனுபவத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பொறுப்பு. ஒரு அதிகாரம் மாத்திரமே, சிறந்ததொரு பணியை நிர்வகிக்க முடியாது. அதற்கு கூடுதல் தகுதி, அனுபவமும் அவசியம்.கல்வித்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் இயக்குனர்களின் பணி அளப்பரியது. கல்வி வளர்ச்சியில், அயராது பணியாற்றிய, இயக்குனர் பதவியை ரத்து செய்திருப்பது சரியல்ல.அ.தி.மு.க., அரசு இருந்த போதே, பள்ளிக்கல்வி கமிஷனர் பொறுப்பு உருவாக்கப்பட்டது. அப்போதே, பள்ளிக்கல்வி துறை முன்னாள் அமைச்சர் என்ற முறையில், இது, தவறான முன்னுதாரணம் என்று சுட்டிக் காட்டினேன்.அது, அதிகார குறைப்பல்ல; வேலைகளை துரிதப்படுத்துகிற முயற்சி என்று சொல்லப்பட்டது. தற்போது, இந்தப் பணியை அடியோடு ரத்து செய்வதும், ஒட்டு மொத்த இயக்குனர்களின் பொறுப்பை, கமிஷனரே ஏற்றுக் கொள்வதும், அதிகாரக் குவியலை ஏற்படுத்துமே தவிர, பள்ளிக் கல்வியின் சீர்திருத்தத்துக்கு, ஒரு போதும் வழிவகுக்காது. இவ்வாறு, வைகை செல்வன் கூறியுள்ளார்.