முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு
மதுரை: சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன்,93, நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார்.இவர் கான்பூர் ஐ.ஐ.டி., தலைவராக பதவி வகித்தவர். சென்னை அண்ணா பல்கலையில் இரண்டு முறை துணைவேந்தராக பணியாற்றியபோது உயர் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வு தேவையில்லை என ரத்து செய்ய பரிந்துரைத்த நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்தார். தமிழக பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறைக்கு திட்டம் வகுத்து சேர்க்கையை எளிமைப்படுத்திய பெருமை இவரை சேரும். எவ்வித கட்டமைப்பும் இல்லாமல் செயல்பட்ட 44 நிகர்நிலை பல்கலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைத்த குழுவில் இவர் முக்கிய பொறுப்பு வகித்தார். தமிழக பள்ளிக் கல்வி புதிய பாடத்திட்டம் தயாரிப்பு குழுவில் இவரது பணி பாராட்டத்தக்கதாக இருந்தது. கணினி இணையத்தில் தமிழ் மொழி பயன்பாட்டை எளிமைப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துக்களை உருவாக்க உறுதுணையாக இருந்த கல்வியாளர் இவர். அரசியல், அதிகார வர்க்கத்தில் செல்வாக்கு மிகுந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்ட சூழ்நிலையில் சேலம் பெரியார் பல்கலையில் வெளிப்படையாக ஆன்லைனில் விண்ணப்பம் பெற்று தகுதியான துணைவேந்தரை தேர்வு செய்தார். இதே நடைமுறை மதுரை காமராஜ் பல்கலையிலும் பின்பற்ற காரணமாக இருந்தவர்.