தைரியம் இருந்தால் ஜெயம் நிச்சயம்!
மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தேர்வில் பயமில்லாமல் தேர்வு எழுதுவது குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர். \ இதில், பிளஸ்2 கலைப்பிரிவு மாணவர்களுக்காக ஆசிரியர்கள் வழங்கிய டிப்ஸ் இளங்கோவன், தமிழ் (ருக்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி):எழுத்துப்பிழை, சந்திப்பிழை, அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாக விடைகளை எழுதினால் கட்டாயமாக தமிழில் சென்ட்டம் பெற முடியும். திருக்குறளில் 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் வருவதால், முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.சிற்றிலியக்கியங்கள், தொடர்நிலை செய்யுள், மறுமலர்ச்சி பாடல்களில் இருந்தும் விடையளிக்கும்போது முக்கிய பகுதிகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். உரைநடைப்பகுதிகளை புரிந்து படித்தாலே, எளிதாக விடையளிக்கலாம். இலக்கணம் என்றாலே அணி, உவமை என சிலர் தயக்கம் காட்டுகின்றனர். பழைய வினாத்தாள்களை பார்த்து திரும்ப திரும்ப கேட்கக்கூடிய வினாக்களை தேர்வு செய்யலாம்.பழமொழி வினாவுக்கு விடையளிக்கும்போது நிகழ்ச்சியையும் விளக்கினால் மட்டுமே முழு மதிப்பெண் டைக்கும். துணைப்பாட பகுதியில் முன்னுரை, ஆசிரியர், கதை மாந்தர்கள் ஆகியவை கட்டாயமாக இடம்பெற வேண்டும். கதைமாந்தர் குறித்து விடையளித்தால் காட்சியை தெளிவாக விளக்க வேண்டும். ஒருசிலர் இணைந்து குழுக்களாக படித்தால், சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்; எளிதில் நினைவில் பதியும். மாசிலாமணி, பொருளியல் (பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி, காளியாபுரம்): தற்போதைய பாடத்திட்டங்களால் தேர்வு முன்பை விட எளிதாக்கப்பட்டுள்ளது. எனவே, நிச்சயம் சென்ட்டம் வாங்க முடியும். பொருளியலில் குறைந்தபட்சமாக ஆறு பாடங்கள் படித்தாலே 200 மதிப்பெண் பெற முடியும். நுகர்வோர் போக்கு, தேவை மற்றும் அளிப்பு விதிகள், விலைக்காரணிகள் உள்ளிட்ட வினாக்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. கட்டுரை பகுதி வினாக்களுக்கு 60 மதிப்பெண்கள் என்பதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விதி, இலக்கணம், பட்டியல், உட்தலைப்பு மற்றும் படம் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். வரைபடத்தில் எக்ஸ் மற்றும் ஒய் அச்சுகளை தெளிவாக குறிப்பிட்டு, காலத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும். முழு மதிப்பெண் பெற வரைபடங்களை தெளிவாக வரைய தகுந்த பயிற்சி எடுக்க வேண்டும். தினமும் ஒரு பாடம் வீதம் படித்தாலே, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அனைத்து பாடங்களையும் முடித்து விட முடியும். சங்கீதா நாயர், ஆங்கிலம் (மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி): ஆங்கிலத்தில், இலக்கண பகுதியில் எளிதாக முழு மதிப்பெண்ணையும் பெற முடியும். கட்டுரை வினாக்கள் பெரும்பாலும் முதல் நான்கு பாடங்களிலிருந்துதான் கேட்கப்படுகிறது. நெடு வினாக்களை, தெளிவாக, பிழையின்றி எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும். இந்த வினாக்கள் மூன்று பக்கம் எழுதுவது நல்லது. செய்யுள் பகுதி வினாக்களில், முக்கிய வினாக்களை மையப்படுத்தி காட்டலாம். செய்யுள் பகுதியில், விளக்கமளிக்கும் வினாக்களுக்கு, செய்யுள் தலைப்பு, ஆசிரியர் பெயர் எழுதினால் இரண்டு மதிப்பெண் கிடைக்கும். செய்யுள் வரிகளுக்கான விளக் கத்திற்கு ஒரு மதிப்பெண் கிடைக்கும். துணைப்பாட கட்டுரைகளை படிக்கும் போது, முக்கிய வரிகளை பதிவு செய்து கொண்டால், ஒரு மதிப்பெண் பெற முடியும். கட்டுரை வடிவிலான வினாக்களுக்கு பக்க தலைப்புகளும், முடிவுரையும் இட வேண்டும். அப்போதுதான், முழு மதிப்பெண் கிடைக்கும். இ-மெயில் எழுதும் வினாவுக்கு www என எழுதக்கூடாது. அதேபோல், பெரிய எழுத்துகளையும் பயன்படுத்தகூடாது. இந்த தவறால், மதிப்பெண் இழக்கின்றனர். கடித பகுதியை தெளிவாக வழிமுறைகளுடன் எழுத வேண்டும். நெடு வினாக்களின் போது, ஆங்கிலத்தில் நன்கு பயிற்சியுடைய மாணவர்கள் அழகிய வாக்கியத்தை வடிவமைத்து எழுதினால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். சிவராஜ், கணக்கு பதிவியல் (பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி, காளியாபுரம்):நேரத்தை சரியாக பயன்படுத்தினால், அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடியும். அக்கவுண்ட்சில் பகுதி ஏ வுக்கு 25 நிமிடமும், பகுதி பிக்கு 45 நிமிடம், பகுதி சி 15 நிமிடம், பகுதி டிக்கு 80 நிமிடமும் ஒதுக்க வேண்டும்.மீதமுள்ள நேரத்தில், விடைகளை சரிபார்க்க வேண்டும். இப்பாடத்தில், ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்படுகிறது. புத்தகத்திலிருந்து மட்டும் 75 சதவீத வினாக்கள் வருகிறது. கணக்கு பதிவியலில், கணக்கு, தியரி என இரு வகை வினாக்கள் கேட்கப்படுகிறது. கணக்கு வகை வினாவை தேர்ந்தெடுத்தால், முழு மதிப்பெண் பெறலாம். கணக்கு போட்ட பின், விடையை சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, தொகையை சரியாக எழுத வேண்டும். கணக்கை மனப்பாடம் செய்யக்கூடாது. புரிந்து போட வேண்டும். மதிப்புகளை போடும் போது, வரிசைப்படி போட வேண்டும். விடைத்தாளை கட்டும் போது, வரிசை படுத்தி கட்ட வேண்டும். "அக்கவுண்ட்ஸ்&' விடைத்தாள் அவிழாதபடி கட்ட வேண்டும். இறுதிக் கணக்குகளுக்கு பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். கணக்கு பதிவியலில், ஒவ்வொரு படிநிலைக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. பற்று, வரவுகளை சரியாக குறிப்பிட வேண்டும். பேரேடு வகை கணக்குகளுக்கு விடையளிக்கும் போது குறிப்பேடு எழுதி நேரத்தை வீணாக்காமல் நேரடியாக பேரேடு எழுத பயிற்சி எடுக்க வேண்டும். மனோரஞ்சிதம், வணிக கணிதம் (மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி): வணிக கணிதத்தை பொறுத்தவரை சிறு வகுப்புகளில் படித்தவைதான் அதிகமாக கேட்கப்படுகிறது. அதை தெரிந்திருந்தால், 50 சதவீதம் மதிப்பெண் பெறலாம். தேர்வு எழுதும் முறைக்கு, முக்கிய தகவல்களை கோடிட்டு காட்டுவது ஆகியவற்றுக்கு 20 சதவீத மதிப்பெண் கிடைக்கிறது. மீதமுள்ள 30 சதவீத மதிப்பெண் கேள்விக்கு சரியான பதில் அளித்திருந்தால் பெறலாம். கணித தேர்வு எழுதும் மாணவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பை சரியாக கவனிக்க வேண்டும். அளவு, அலகுகள் சரியாக குறிக்க வேண்டும். தேர்வில், சி பிரிவு எழுதும் போது, நன்கு தெரிந்த சிறிய வினாவாக தேர்வு செய்ய வேண்டும். இதில், நேரம் குறைவதோடு, முழு மதிப்பெண் பெறலாம். இரண்டு முறை ஒவ்வொரு கணக்கு போட்டு பார்த்தால், எளிதாக மனிதில் பதியும். வகைக்கெழு சமன்பாட்டில் கவனம் செலுத்தினால், எளிதாக மதிப்பெண் பெறலாம். விடையை கருப்பு பேனாவால் எழுதினால் இரண்டு மதிப்பெண் உண்டு. கணக்கு சூத்திரங்களை தெளிவாக, கட்டமிட்டு எழுதினால் இரண்டு மதிப்பெண் கிடைக்கும். ஒரு மதிப்பெண் வினாவில் முழு மதிப்பெண் பெற புத்தகத்திலுள்ள 175 வினாக்களை தொகுத்து வைத்து மனபாடம் செய்ய வேண்டும். மகேஸ்வரன், வணிகவியல் (ருக்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி): வணிகவியலில் குறைந்த பாடங்கள் மட்டுமே இருப்பதால் எளிதாக மதிப்பெண்களை பெற முடியும். தேர்வில் 50 சதவீத வினாக்கள் எளிதாகவும், 40 சதவீத வினாக்கள் சராசரியாகவும் கேட்கப்படுவதால், எளிதாக 180 மதிப்பெண் களை பெறலாம். மீதமுள்ள 10 சதவீதம் கடினமான கேள்விகள் இடம்பெறுவதால், பாடத்தை முழுமையாக படித்தால் மட்டுமே சென்ட்டம் பெற முடியும். ஒருமதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் புத்தகத்தில் இருந்தே கேட்கப்படுகின்றன. பங்கு வர்த்தகம், அவற்றின் நன்மை, குறைபாடு, செபியின் நோக்கம், கூட்டாண்மை மற்றும் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் போன்ற பாடங்கள் திரும்பத்திரும்ப இடம்பெறுவதால் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெருவினாக்களுக்கு கட்டாயமாக உட்தலைப்பிட்டு விளக்கமளிக்க வேண்டும். குறிப்பிட்ட பக்கத்திற்குள் விடையளித்தால் போதுமானது. வேகமாகவும், குறிப்பிட்டளவும் விடைகளை எழுத மாணவர்கள் முன்வர வேண்டும். பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய டிப்ஸ் மணிமேகலை, தமிழ் (எல்.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி): திட்டமிட்டு படிக்கும் பழக்கத்தையும், எழுத்து பிழை இல்லாமல் எழுதும் பண்பையும் வளர்த்து கொள்ள வேண்டும். தமிழை பொறுத்தவரை, ஒவ்வொரு எழுத்து பிழைக்கும் அரை மதிப்பெண் குறையும். செய்யுள் பகுதி வினாக்களுக்கு பாடல் வரிகளை எழுதினால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். பத்தி, பத்தியாக எழுதாமல், பாயின்டாக எழுதுவது நல்லது. தமிழ் முதல்தாளில், 100 மதிப்பெண்ணில், திருக்குறளுக்கு 30 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினால், முழு மதிப்பெண் பெறலாம். திருக்குறள் பகுதியிலிருந்து வரும் வினாக்களுக்கு விடையளிக்கும் போது, குறளை மேற்கோள் காட்டினால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். நெடுவினாக்களுக்கு, தலைப்பும், உட்தலைப்பும் அவசியம். மனப்பாட பகுதிகளுக்கு, பா வகையும், ஆசிரியர் பெயரையும் குறிப்பிட வேண்டும். பா வகை எழுதினால், இரு மதிப்பெண் உண்டு. இரண்டாம் தாளில், உரைநடைக்கு 30 மதிப்பெண் உண்டு. பாடங்களை தேர்வு செய்து படித்தால், எளிதில் மதிப்பெண் பெற முடியும். விடைகளை தெளிவாக எழுத வேண்டும். முக்கிய வினாக்களுக்கு ஆசிரியர் குறிப்பு அவசியம். ராஜன், ஆங்கிலம் (பொள்ளாச்சி எல்.எம்.எஸ்., மேல்நிலைப்பள்ளி): சிறு, சிறு வாக்கியங்களை பிழையில்லாமல் அமைக்க கற்றுக்கொள்ள வேண்டும். இது ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற வழிவகுக்கும். ஆங்கிலம் முதல் தாளில், 35 மதிப்பெண் உரைநடை, செய்யுள் பகுதிக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 65 மதிப்பெண்ணில், 40 மதிப்பெண் இலக்கணத்திற்கும், பத்து மதிப்பெண் ஒரு வரி வினாக்களுக்கும், 15 மதிப்பெண் கட்டுரை என பிரித்து வழங்கப்படுகிறது. மாணவர்கள், 65 மதிப்பெண் சரியாக எழுதினாலே அதிக மதிப்பெண் பெறலாம். இலக்கணத்தில், புரிந்து பயிற்சி எடுக்க வேண்டும். அனைத்து வார்த்தைகளுக்கும் விளக்கம் தெரிந்து வைத்தால், ஆங்கிலத்தில் பிழைகள் வராது. அழகாகவும், பிழையில்லாமலும் எழுதினால், முதல்தாளில் கூடுதல் மதிப்பெண் பெறலாம். இரண்டாம் தாளில், துணைப்பாட கட்டுரை, பொதுக்கட்டுரைகளை தெளிவாக படித்து பயிற்சி பெற்றால், அதிலும் அதிக மதிப்பெண் பெறலாம். கட்டுரை வடிவிலான வினாக்களுக்கு முக்கிய கருத்துகளை கோடிட்டு காட்ட வேண்டும். பக்க தலைப்புகள் இட்டால், ஒரு மதிப்பெண் உண்டு. கடிதத்தை எழுதி பயிற்சி பெற வேண்டும். இதில், எளிதாக மதிப்பெண் பெற முடியும். ஆங்கிலத்தை பொறுத்தவரை பயிற்சி இருந்தால், அதிக மதிப்பெண் பெறலாம். முருகேஷ், இயற்பியல் (அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, ஆனைமலை):தேர்வு எழுதும் மாணவர்கள் விடை பிரிவை சரியாக குறிப்பிட வேண்டும். விடைகளை அந்தந்த வரிசையிலும், தெளிவாக எழுத வேண்டும். மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும். கணக்கு வகையிலான வினாக்களுக்கு, விடைகளை தெளிவாக எழுதுவதுடன், அலகுகளை குறிப்பிட வேண்டும். சூத்திரங்களை எழுதினால், ஒரு மதிப்பெண் கிடைக்கும். வினாத்தாளில் தவறான வினாக்கள் கொடுக்கப்பட்டிருப்பது நன்கு தெரிந்தால் மட்டுமே அந்த வினா எண்ணை றிக்கலாம். அதற்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும். ஒரு மதிப்பெண் வினாக்களில், மாணவர்களின் மதிப்பெண் சரிகிறது. புத்தகத்தின் பின்புறத்திலுள்ள வினாக்களை தொகுத்து படிக்க வேண்டும். பழைய தேர்வு வினாக்களை, தேர்வு முறையில் எழுதி பயிற்சி எடுத்தால், 80 சதவீத மதிப்பெண் எளிதில் பெறலாம். படங்கள் வரையும் வினாக்களுக்கு படங்கள் வரைந்து பாடங்களை சரியாக குறிக்க வேண்டும். பாயின்ட் உள்ள கேள்விகள் எழுதினால், கூடுதல் மதிப்பெண் பெறலாம். மகாலிங்கம், கணிதம் (நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி): தேர்வில், வினாத்தாளை முதலில் நன்கு படித்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் நன்கு தெரிந்த வினாக்களை எழுத வேண்டும். கணித தேர்வில், "பகுதி - அ&' பிரிவுக்கு ஒரு மதிப்பெண் வினா வழங்கப்படும். இதற்கு 50 நிமிடங்களும், "பகுதி-ஆ&' பிரிவுக்கு 45 நிமிடங்களும், பகுதி - இ பிரிவுக்கு 85 நிமிடங்களும் ஒதுக்க வேண்டும். அலகுகள் மற்றும் குறியீடுகளை சரியாக குறியிட வேண்டும். இதற்கு ஒரு மதிப்பெண் உண்டு. விடைகளை கட்டமிட்டு காட்ட வேண்டும். கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கணித படிக்கும் மதிப்பெண் வழங்கப்படும். ஏதாவது ஒரு படியை தவறாக எழுதி விடை சரியாக இருந்தாலும் மதிப்பெண் இழக்க வாய்ப்புண்டு. அதேபோல், கோணம் உள்ளிட்டவற்றையும் சரியாக வரைய வேண்டும்.புத்தகத்திலுள்ள கணக்குகளும், எடுத்துக்காட்டு வினாக்களும் தான் 94.6 சதவீதம் வருகின்றன. மீதமுள்ள 5.4 சதவீதம் புத்தகத்திலிருந்து வெளியில் கேட்கப்படுகிறது. ராதிகா, வேதியியல் (எல்.எம்.எச்.எஸ்., மேல்நிலைப்பள்ளி): நடைமுறை வேதியியலில் ஒரு மதிப்பெண் கேள்விகள் சரிவர கேட்கப்படுவதில்லை. ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு சமன்பாடு கணக்கு கேட்கப்படுகிறது.மின், கனிம மற்றும் இயல்பு வேதியியல் பகுதிகளில் சமன்பாடு கணக்கு கட்டாயமாக இடம்பெறுகிறது. பாட இறுதியில் உள்ள தன்மதிப்பீடு பகுதிகளில் இருந்து 60 சதவீதம் வினாக்கள் கேட்கப்படுவதால், கூடுதல் கவனம் செலுத்தினால் மதிப்பெண்களை தட்டிச்செல்லலாம். கரிம வேதியியலில் கணக்குகளை தனியாக படிக்க வேண்டிய அவசியமில்லை. செயல்விளக்கம் சரிவர தெரிந்திருந்தாலே போதுமானது. கட்டாயமாக சமன்பாடுகளை சமன் செய்தால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். வினைப்படு, வினை விளை பொருள் பெயர்களை எழுத வேண்டும். சமன்பாடுகளில் அம்புக்குறியின் மீது அழுத்தம், வெப்பநிலைகளை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். வேதி வினைகள், சமன்பாடுகள், வரையறைகள், தனிமங்களின் தன்மைகளை பட்டியலிட்டுக்கொண்டு தினமும் நினைவுபடுத்தி பயிற்சி எடுக்க வேண்டும். சுமதி, உயிரியல் (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை):தாவர குடும்பங்களின் பெயர்களை சரியாக குறிப்பிட்டால்தான் மதிப்பெண் கிடைக்கும். கேள்விகளுக்கேற்ப, அட்டவணையையும், விளக்கமும் அளிக்க வேண்டும். இதற்கு தனித்தனியாக ஐந்து மதிப்பெண் உண்டு. தாவர உள்ளமைப்பியல், தாவர செயலியல் பகுதிகளில் அதிக வினாக்கள் கேட்கப்படும். தாவர செயலியலில் 32 மார்க்குகளுக்கும், ஆஞ்சியோபெர்ம் பிரிவில் இருந்து 24 மார்க்குகளுக்கும் வினாக்கள் கேட்கப்படும். சுற்றுசூழலில், பயன்பாட்டு உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். படம் வரைய வேண்டிய வினாக்களுக்கு தெளிவாக படம் வரைந்து, பாகம் குறிக்க வேண்டும். அதேவேளையில், சிறிய படங்களை தேர்வு செய்தால், குறுகிய காலத்திற்குள் வரைய முடியும். படத்திற்கு இரண்டரை மதிப்பெண், பாகங்களுக்கு இரண்டரை மதிப்பெண், விளக்கத்திற்கு ஐந்து மதிப்பெண் உண்டு. பொட்டானிக்கல் பெயர்களை தெளிவாக எழுதி அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். தொடர்ந்து சில ஆண்டுகளாக கேட்கப்படும் கேள்விகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். படம், மற்றும் உட்தலைப்புகள் மிகவும் அவசியம். விலங்கியலில் சுற்றுச்சூழல் கல்வி, பண்பாட்டு கல்வி பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனித உடல் செயலியலில் 10 மார்க் கேள்வி வரும். சீனிவாஸ் ரவிக்குமார், கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.கே.டி., மேல் நிலைப்பள்ளி): கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 150 மதிப்பெண்களையும் எளிதாக பெறலாம். ஒரு மதிப்பெண் பிரிவில் 75 வினாக்களுக்கு ஓ.எம்.ஆர்., சீட்டில் விடையளிக்க வேண்டும். இரு மதிப்பெண் வினாக்களுக்கு துணைத்தலைப்பு அளித்து, இரண்டு பாயிண்ட்டுகளாக எழுத வேண்டும். புரோகிராம் அவுட்புட் வினாக்களை புரிந்து விடையளிக்க வேண்டும். ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு டயலாக் பாக்ஸ், விண்டோஸ் போன்றவற்றை வரைந்து, பாயின்ட்களாக எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும். பாயின்ட்களுக்கு நம்பர் எழுதாமல், குறியீடுகளை இட வேண்டும்.வேறுபாடு அறிதல் கேள்விகளுக்கு அட்டவணையிட்டு பாயின்ட்களை குறிப்பிட வேண்டும். ஸ்டேட்மென்ட்டில் பயன்பாடு, வழிமுறை, விரிவாக்கம், உதாரணம் ஆகியவற்றையும், தேவையான இடங்களில் பங்ஷன்ஸ், கீபோர்டு பயன்படுத்தும் விதம் மற்றும் ஷார்ட் கட் கீ ஆகியவற்றையும் குறிப்பிடவும். ஒரு பகுதி முழுமையடைந்தவுடன் மறு பகுதி கேள்விகளுக்கு விடையளித்தால், ஆசிரியர்களால் எளிதாக திருத்த முடியும். ஒரு மார்க் வினாக்களை கண்டறிய பாடம் படிக்கும் போதே முக்கியமான பாயின்ட்டுகளுக்கு அடிக்கோடிட்டு படிக்க வேண்டும். ஜெயித்துக்காட்டுவோம் துளிகள் * ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் காலை 8.00 மணி முதலே அரங்கிற்கு வந்தனர். மதியம் நடந்த ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களுக்கான நிகழ்ச்சிக்கு 11.00 மணிக்கு மாணவர்கள் வந்தனர். * மாணவர்கள் பாடம் படிப்பதில் மட்டும் குறியாக இருக்கக்கூடாது; உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். * நிகழ்ச்சி முடிந்ததும் மாணவ,மாணவிகள் அந்தந்த பாடம் பற்றி டிப்ஸ் வழங்கிய ஆசிரியர்களை அணுகி பாடத்திலுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். * ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கூறிய டிப்ஸ்களை மாணவர்களுடன் வந்திருந்த ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஆர்வமுடன் குறிப்பெடுத்தனர். * நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பேசும்போது, தினமலர் சார்பில் வழங்கிய புளு பிரிண்ட் புத்தகத்தில் உள்ள வினாக்களை படித்தாலே அதிக மதிப்பெண் பெற முடியும் என்றனர். * தேர்வு காலத்தில் மொபைல்போன் பயன்படுத்துவதையும், டிவி பார்ப்பதையும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும்; பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக டிவி பார்ப்பதை தவிர்த்து உதவ வேண்டும் என்றனர். * ஒரு மதிப்பெண் வினாவுக்கான பதில், சமன்பாடுகள், சூத்திரங்களை டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து ரிலாக்ஸ் ஆக இருக்கும் நேரத்தில் போட்டு கேட்டால், மனதில் எளிதாக பதியும் என்று ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.