மகளிர் பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை: அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த போன் மிரட்டலை தொடர்ந்து, பல்கலை மாணவியருக்கு இன்று (டிச. 7ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையின் பதிவாளர் ‘லேண்ட்லைன்’ போனுக்கு இன்று மதியம் ஒரு போன் வந்துள்ளது. போனை கல்லூரி பியூன் எடுத்துள்ளார். போனில் மலையாளத்தில் பேசிய பெண் குரல், ‘பல்கலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்துக்குள் வெடிக்கும்’ என்று கூறியுள்ளது. இது பற்றி பல்கலை துணைவேந்தரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த துணைவேந்தர், பல்கலை வகுப்புகள், பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்தார். மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பத்திரமாக வெளியேறினர். மோப்ப நாய்களுடன் வந்த போலீசார் பல்கலைக்கழகம், பல்கலை வளாகத்தில் உள்ள துவக்க, மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரி வகுப்பறைகள், மாணவியர் விடுதி, சமையல் அறை என அனைத்து இடங்களிலும் தேடினர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. திடீர் வெடிகுண்டு புரளியால் பல்கலை அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.