தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாகும் செம்மொழி!
பேரூர் தமிழ்கல்லூரியில் தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை இலக்கண ஆய்வு மரபுகள் குறித்த தேசியப் பயிலரங்கம் நேற்று துவங்கியது. இதில், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பரிதிமாற்கலைஞர் முதல் சைவ சித்தாந்த மன்றங்கள் உள்பட நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்கள் வலியுறுத்தி வந்த செம்மொழி அந்தஸ்து தற்போது கிடைத்துள்ளது. மத்திய அரசு ஒரு மொழிக்கென 1,200 கோடி ரூபாயை ஒதுக்குகிறது. அந்தஸ்து பெ றாத காலகட்டத்தில் நமது தமிழ்மொழிக்கு ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ஒதுக்கவில்லை. தற்போது தமிழ்மொழிக்கு வழங்கப்பட்ட செம்மொழி அந்தஸ்தால் அது முழுமை பெற்றதாகி விடாது. அதை எல்லைகளைக் கடந்து பரப்பிட அடி அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் தமிழ் அறிஞர்கள், மாணவர்கள், புலவர்கள் புதிய இலக்கியம், புதிய நூல் படைப்புகளில் மட்டுமே ஆர்வம் செலுத்தாமல் பழமையான தமிழ் இலக்கண நூல்களை ஆராய்ந்து அதன் சிறப்புகளை உலகெங்கிலும் கொண்டு சென்றிட வேண்டும். அதற்கான முயற்சியில் இளையதலைமுறையினர் ஈடுபட வேண்டும். இவ்வாறு பேரூராதீனம் பேசினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன உறுப்பினர் சேதுராமன் சிறப்பு அழைப்பாளராக பேசியதாவது: உலகத்தில் நன்னூல், தொல்காப்பியத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ் புலவர்கள் சமஸ்கிருதத்தின் அடிவருடிகளாக இருந்தனர். ஆனால் ராமலிங்க வள்ளலார் காலத்திற்கு பின்பு தான் மொழி ஆதிக்கம் அதிகமானது. தமிழுக்கு சக்தியும், தன் வயப்படுத்தும் ஆற்றலும் உள்ளதால் தான் களப்பிரர் காலம், பல்லவர் ஆட்சி காலம் உள்ளிட்ட காலங்களில் எத்தனையோ ஆதிக்கமொழிகளையும் தாண்டி இன்றும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ்மொழியின் இலக்கணம், இலக்கியத்தின் சிறப்புகளை வெளியுலகிற்கு யாரும் கொண்டு செல்லவில்லை.எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு தமிழ் அறிஞர்களின் திறமைகளை பழமையான இலக்கண நூல்களில் பார்க்க முடியும். இதை தமிழர்களே முழுமையாக உணராத நிலைதான் உள்ளது. ஆனால் அதற்கு நேர் மாறாக ஷெல்லி, ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட வெளி நாட்டு கவிஞர்களின் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் தமிழின் சிறப்புகளை உலகம் எல்லாம் கொண்டு சென்றிட தமிழ் மொழியின் தொன்மைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இலக்கண அறிவுடன் கூடிய மொழி உணர்வு தமிழின் பரவலான வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும் என் பதை மறுக்க முடியாது.இவ்வாறு,சேதுராமன் பேசினார். பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், கல்லூரி முதல்வர் மனோன்மணி உள்பட திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.