பள்ளி வாகன போக்குவரத்து முடங்கியது
மேலும், போலீசாரின் சோதனைக்கு பயந்து, ஆவணங்கள் இல்லாத வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், பள்ளி வாகன போக்குவரத்து கணிசமாக முடங்கியுள்ளதோடு, திடீரென மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல், பெற்றோர் திண்டாடுகின்றனர். கடந்த மூன்றாம் தேதி, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்திரிப்புலம் என்ற இடத்தில், தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில், ஒன்பது குழந்தைகளும், ஒரு ஆசிரியையும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பொது மக்களின் நெஞ்சை உலுக்கியது. இதையடுத்து, பள்ளி வாகனங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், போலீசாரும் சேர்ந்து, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். முறையான ஆவணங்கள் இல்லாத, பராமரிக்கப்படாத வாகனங்களை உடனுக்குடன் பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் வைத்து, மாவட்ட கலெக்டர் சோதனை செய்தார். இதில், சரிவர பராமரிப்பு செய்யப்படாத பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், சென்னை மற்றும் புறநகர்களில் நடந்த சோதனையிலும், பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போக்குவரத்துத் துறையின் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக, மாநிலம் முழுவதும் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், வாகன உரிமையாளர்கள், போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து, ஆவணங்கள் இல்லாத வாகனங்களை இயக்காமல் முடக்கி வைத்து விட்டனர். இதன் காரணமாக, பள்ளி வாகன போக்குவரத்து, கணிசமான அளவு முடங்கியுள்ளது. வாகன உரிமையாளர்களின் திடீர் நடவடிக்கையால், வேன்களில் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பல பகுதிகளில் வேன்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் தொடர்புகொண்டு கேட்டால், வேன்கள் வராது; மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுங்கள் என்று பதிலளிக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லக் கூடியவர்களின் நிலை, பெரும் திண்டாட்டமாக உள்ளது. இருவரில் ஒருவர் விடுமுறை எடுத்துவிட்டு, பிள்ளைகளை ஆட்டோவில் அழைத்துச் செல்கின்றனர். போக்குவரத்து துறையினரின் அதிரடி தொடரும் வரை, முழுமையான அளவிற்கு பள்ளி வாகனங்கள் இயக்கப்படாது என்று தெரிகிறது. இதனால், என்ன செய்வதென தெரியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். போக்குவரத்துத் துறை கமிஷனர் மச்சேந்திரநாதன் கூறும்போது, மாநிலம் முழுவதும் நடந்த ரெய்டில் 190 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்குவதை அனுமதிக்க மாட்டோம். பள்ளி வாகனங்கள் மீதான ரெய்டு தொடர்ந்து நடைபெறும் என்றார். 300க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. போக்குவரத்துத் துறை அதிரடி காரணமாக, பெற்றோர் பாதிக்கப்பட்டாலும், வேதாரண்யம் போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டுமெனில், முறையற்ற வாகனங்களை களையெடுப்பது மிகவும் முக்கியம். வேன் போக்குவரத்து தொழிலுக்கு இது போதாத நேரம். தொடர் விபத்துகள் எதிரொலியாக, போலீசாரும், போக்குவரத்துத் துறையினரும், பள்ளி வாகனங்களை சல்லடை போட்டு சோதனை செய்கின்றனர். வேன்களை இயக்குபவர்கள், காலை நேரத்தில் இரண்டு, டிரிப் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்வர். 9 மணிக்குப் பின், வங்கிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்களை ஏற்றிச் செல்வர். அதேபோல், 3 மணிக்கு பள்ளி முடிந்ததும், மாணவர்களை வீட்டில் விட்டுவிட்டு, மாலை 6 மணிக்கு மீண்டும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்கின்றனர்.இதன் மூலம், மாதந்தோறும் சுளையாக பல ஆயிரம் ரூபாயை வருவாயாக பார்த்து வந்தனர். அரசின் கிடுக்கிப்பிடி காரணமாக, வேன் போக்குவரத்துத் தொழில் தற்போது படுத்துள்ளது. அரசு உத்தரவுப்படி, பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வர்ணம் பூசினால், இதுபோல் இரண்டு தொழில்களைச் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான், வர்ணம் அடிக்கும் விவகாரத்தில், அரசு விதிமுறைகளை மீறுகின்றனர்.