உள்ளூர் செய்திகள்

கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவித்தொகை

இத்தகவலை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறினார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், கங்கண சூரிய கிரகணம் குறித்த பயிலரங்கம், பள்ளி மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா மற்றும் காப்புரிமை குறித்த கருத்தரங்கம் ஆகியவை நடைபெற உள்ளன. இவைகுறித்து வின்சென்ட் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரும் ஜனவரி 15ம் தேதி, கங்கண சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதுகுறித்து ஆந்திரம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 22, 23 மற்றும் 24ம் தேதிகளில் பயிரலங்கம் நடைபெறும். மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 172 பேர் பங்கேற்கும் கல்விச் சுற்றுலா, இன்று முதல் 24 ம் தேதி வரை நடக்கிறது. இதில் அவர்கள், சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வல்லுனர்களுடன் கலந்துரையாடுகின்றனர். காப்புரிமை தகவல் மையங்களின் அனைத்திந்திய 12 வது கலந்தாய்வு கூட்டம், வரும் 21, 22 ம் தேதிகளில் நடக்கிறது. சென்னை பல்கலை உள்ளிட்ட ஐந்து பல்கலைக் கழகங்களில், எங்கள் மன்றத்தின் காப்புரிமை மையங்கள் உள்ளன.இந்த ஆண்டு முதல், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்படி, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் முதுநிலை அறிவியல், பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் கால்நடை அறிவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களில் 300 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தரப்படும். இதற்காக 36 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வின்சென்ட் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்