வரும் கல்வியாண்டிலிருந்து காரைக்கால் என்.ஐ.டி.,
இது குறித்து திருச்சி என்.ஐ.டி., இயக்குனர் சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் 20 தேசிய தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகின்றன. வரும் கல்வியாண்டில் (2010-11) புதிதாக எட்டு என்.ஐ.டி.,க்கள் துவக்கப்பட உள்ளன. இதில், காரைக்காலில் ஒரு என்.ஐ.டி., அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.காரைக்கால் என்.ஐ.டி.,யில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவக்கப்பட உள்ளது. முதலாமாண்டில் 180 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். எலக்ட்ரிக்கல் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. இதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 90 சீட்களும், அகில இந்திய மாணவர்களுக்கு 90 சீட்களும் ஒதுக்கப்படும். படிப்படியாக சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட வகுப்புகள் மற்றும் எம்.டெக்,. உள்ளிட்ட மேற்படிப்புகள் துவக்கப்படும்.காரைக்கால் என்.ஐ.டி., அமைக்க 30 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 20 கோடி ரூபாய் என, ஆறு ஆண்டுகளில் 180 கோடி ரூபாய் வழங்கி, கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்படும். என்.ஐ.டி., நிறுவனம் சொசைட்டி மூலம் செயல்பட உள்ளது. சொசைட்டிக்கு தலைவர், உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. என்.ஐ.டி., கட்டடப் பணி துவங்காததால் தற்காலிகமாக இயங்குவதற்கான இடத்தையும் பார்வையிட்டுள்ளோம். அப்படி முடியவில்லை என்றால், திருச்சி என்.ஐ.டி.,யில் ஒரு ஆண்டு மட்டும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.