உள்ளூர் செய்திகள்

வூஷூ தற்காப்பு கலை போட்டி

சென்னை: திருவள்ளூர் மாவட்ட அளவிலான வூஷூ தற்காப்புக் கலை சாம்பியன்ஷிப் போட்டி கும்மிடிப்பூண்டியில் நடந்தது.டேக்வான்டோ, கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் வரிசையில் வூஷூ என்பதும் ஒரு வகை தற்காப்பு கலை. தமிழில் சாண்டோ என அழைக்கப்படும் இவ்விளையாட்டு மல்யுத்தம், குத்துச் சண்டை ஆகியவற்றின் கலவையாக உள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் வூஷூ சங்கம் சார்பாக, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான, நான்காம் ஆண்டு, மாவட்ட அளவிலான வூஷூ சாம்பியன்ஷிப் போட்டி கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.இதில் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எடை பிரிவு மற்றும் வயது அடிப்படையில் 60 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்கள், ஜூலை 6 முதல் 8ம் தேதி வரை திண்டுக்கல்லில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என்பதால் ஒவ்வொரு பிரிவிலும் கடும் போட்டி நிலவியது. கும்மிடிப்பூண்டி தசரதன், குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட வூஷூ சங்க சேர்மன் லட்சுமி காந்தன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்