உள்ளூர் செய்திகள்

முன்னாள் பள்ளி மாணவர்கள் சங்கமம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பெரியார் நகரில் அரசு உதவிப்பெறும் வெள்ளையன் செட்டியார் மேல் நிலைப்பள்ளியில், 1993 - 1995ம் ஆண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சநாதன் தலைமையில் நடந்தது.வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் உதவியுடன், வெளிநாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி வளாகத்தில் ஒன்று திரண்டிருந்தனர். அவர்களில் பலர் வங்கி அதிகாரி, கப்பற்படை, பேராசிரியர்கள், மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். நிகழ்ச்சியில், அவர்களுக்கு பாடம் போதித்த, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.விழாவில் பங்கேற்க முடியாதவர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக, நிகழ்ச்சி அரங்கில் தோன்றி, தங்களது பள்ளிக் கால நினைவுகள், நட்புகள் குறித்து, உணர்ச்சி வசத்துடன் பகிர்ந்துக் கொண்டனர். நிறைவாக, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு பிரியாவிடை பெற்றனர். பள்ளியின் படித்த முன்னாள் மாணவர்களுடன் இணைந்து, இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சிகள் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என, முன்னாள் மாணவரான சென்னை மருத்துவக்கல்லுாரி அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் சந்திரசேகர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்