வியக்க வைக்கும் வேளாண் கண்காட்சி
சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உழவர், உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்ற வேளாண் கண்காட்சி நடந்து வருகிறது.இதில் இடம் பெற்றுள்ள பொருட்களும், அவற்றை சந்தைப்படுத்த வைக்கப்பட்டுள்ள விதமும் பார்வையாளர்களை கவர்கிறது. நகைக்கடையில் நகை வாங்கினால் எவ்வாறு &'பேக்கிங்&' செய்து தருவரோ, அதேபோல புடலை, சுரை, முருங்கை உள்ளிட்ட காய்களையும் அழகுற பார்சல் செய்து தருகின்றனர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற நவீன முன்னேற்றம் இது.விவசாய பொருட்களை விளைவிப்பதைவிட, அதை விற்பது என்பதுதான் பெரிய சாமர்த்தியம். அதை எப்படி செய்வது என்பதை விளக்க சில அரங்குகளும், பேக்கிங் செய்வதற்கான கருவிகளும் இடம் பெற்றிருந்தது, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.பெரும்பாலான கடைகளில் மரச்செக்கு எண்ணெயும், சிறுதானிய உணவுகளும் இடம் பெற்றிருந்தன. கடகடவென ஓடும் மக்களுக்கு வெந்நீரில் போட்டவுடன் உடனடி உணவாக மாறும் சிறுதானிய பாக்கெட்டுகள் பலரைக் கவர்ந்தன. மண்ணுக்கேற்ற விதைகள், தேனில் உள்ள அதிகப்படியான வருவாய் உட்பட பல விவசாய தகவல் அறிய முடிந்தது. மொத்த அரங்கில் எங்குமே பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை என்பது சிறப்பு.மூங்கில், பிரம்பு கூடைகள் அமோகமாக விற்பனையாகின. பத்து ரூபாய் நாணயம் அல்லது நோட்டு சொருகி, இயந்திரம் மூலம் எடுக்கப்பட்ட மஞ்சப்பையை, பலரும் பயன்படுத்தினர். விவசாயிகளுக்கான கண்காட்சி என்றாலும், பொதுமக்களுக்கு நிறையவே பயன்படும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியை பார்த்தால், நாமும் விவசாயியாக மாறலாம். இன்றுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது அனுமதி இலவசம்.