உள்ளூர் செய்திகள்

முதுமலைக்கு ஜனாதிபதி இன்று வருகை

கூடலுார்: முதுமலைக்கு ஜனாதிபதி இன்று வருகை தரும் நிலையில், கால நிலை நன்றாக இருந்தால், மைசூரு தேசிய நெடுஞ்சாலை மூடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு இன்று(5ம் தேதி) மாலை, 3:30 மணிக்கு திரவுபதி முர்மு வருகை தருகிறார். முதுமலையில் எடுக்கப்பட்டு, ஆஸ்கார்  விருது பெற்ற, எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்தில் இடம் பெற்ற யானை குட்டிகள் ரகு, பொம்மியை பார்வையிடுவதுடன், அவற்றை பராமரித்து வந்த பழங்குடி தம்பதி பொம்மன்;பெள்ளி மற்றும் பிற பாகன்கள்; பழங்குடி மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மசினகுடி வரும் ஜனாதிபதி, 4:45 மணிக்கு ஹெலிகாப்டரில் மசினகுடியில் இருந்து மைசூரு சென்று அங்கிருக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார். இந்நிலையில், நேற்று மாலை கர்நாடக மாநிலம் மைசூருவிலிருந்து முதுமலை தெப்பக்காடு வரையும்; மசினகுடியில் இருந்து தெப்பக்காடு வரையிலும் வாகன கான்வாய் ஒத்திகை நடந்தது.போலீசார் கூறுகையில், ஜனாதிபதி மைசூருவில் இருந்து ஹெலிகாப்டரில் நேரடியாக மசினகுடி வந்து தெப்பக்காடு செல்வதால், தெப்பக்காடு-மசினகுடி சாலை தற்காலிகமாக மூடப்படும். முதுமலை வழியாக செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலை மூடப்படாது. ஆனால், மேகமூட்டமான காலநிலை நிலவினால், மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, ஜனாதிபதி தெப்பக்காடு வந்து செல்ல வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் மட்டும் மைசூரு தேசிய நெடுஞ்சாலை மூடப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்