கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கும் மாணவர்கள்
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது நந்தனார்புரம். இங்கு 120 வீடுகள் உள்ளன. 375 பேர் வசிக்கின்றனர். இங்கு பாரதி படிப்பகம் செயல்படுகிறது. இந்த படிப்பகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவசமாக டியூஷன் நடத்தப்படுகிறது.இந்த படிப்பகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தங்கள் ஊரில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர் வாருகின்றனர். பின் செடி, கொடி, புதர்களையும், பார்த்தீனிய செடி, குப்பைகளை அகற்றுகின்றனர். மேலும், கிராம மக்களிடம் குப்பைகளை தெருவில் கொட்டாமல், குப்பை தொட்டியில் கொட்ட அறிவுறுத்துகின்றனர். இதனால் கிராமம், சுகாதாரமாக இருக்கிறது. ஊராட்சி தலைவர் செல்வகணேசிடம் கேட்ட போது: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நந்தனார்புரம், ரங்கநாதபுரம், இ.பி.காலனி, சின்னையாபுரம், முடக்குராஜக்காபட்டி, ராஜூ நகர், கலெக்டர் அலுவலக குடியிருப்பு உட்பட 25 கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு, 14,675 பேர் வசிக்கின்றனர். அரசு மூன்று துப்புரவு பணியாளர்களை மட்டுமே அளித்துள்ளது. இவர்களை வைத்து கிராமத்தில் உள்ள சாக்கடை, குப்பைகளை அகற்ற முடியாது. இதனால், பாரதி படிப்பகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் வாரத்தில் ஒரு நாள் நந்தனார்புரத்தில் உள்ள தெருக்கள், சாக்கடை, ஓடைகளை சுத்தம் செய்கின்றனர். இதே மாதிரி அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள் முன்வந்து தங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும், என்றார்.