மாணவர்களின் ஆபத்தான படிப்பயணம் தொடர்கிறது
காரைக்குடி: காரைக்குடி டவுன் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால், அபாயம் நிலவுகிறது.காரைக்குடியிலுள்ள பள்ளி கல்லுாரிகளில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பஸ்களில் வந்து செல்கின்றனர். சாக்கோட்டை, புதுவயல், மானகிரி, பள்ளத்துார், அமராவதிபுதுார் என சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லுாரிகளுக்குச் செல்ல போதிய பேருந்து இல்லாததால் குறிப்பிட்ட பேருந்துகளை மட்டுமே மாணவர்கள் நம்பி உள்ளனர். இதனால், பஸ்சில் நெருக்கியடித்து செல்வதோடு படிகளில் பயணம் மேற்கொள்ளும் அவலமும் அரங்கேறி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய பஸ்களை இயக்குவதோடு, காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் போலீசார் கவனம் செலுத்த வேண்டுமென்றும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.