அவதுாறு பரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த ஜிங்களூர் அரசு உருது நடுநிலைப்பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர் பாலகிருஷ்ணன், 49. இவரை, நேற்று சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆனந்தன் உத்தரவிட்டார்.கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:உயர் அதிகாரிகளை பாலகிருஷ்ணன் தரக்குறைவாக பேசுவதும், அவதுாறு பரப்புவதையும் வழக்கமாக கொண்டவர். அரசை விமர்சித்த விவகாரத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.தற்போதும் மாவட்ட சி.இ.ஓ., முதல் அனைத்து அதிகாரிகள் மீதும் அவதுாறுகளை பரப்பியுள்ளார். இது குறித்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது சான்றிதழ்கள் போலி என்பன உள்ளிட்ட தகவல்களும் வந்துள்ளன. அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.