உள்ளூர் செய்திகள்

யாரை ஏமாற்ற நீட் நாடகம்?

எஸ்.ஆர்.சுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: நீட் தேர்வு அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே, பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் ஒரு மோசடி தேர்வு. இதன் வாயிலாக கோச்சிங் சென்டர்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகள் ஆண்டுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடிக்கின்றன.நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாக இருக்கிறது. இதை ரத்து செய்ய, கவர்னருக்கு அதிகாரம் இல்லை என விளம்பி இருக்கிறார், பா.ம.க., தலைவர் அன்புமணி. தி.மு.க., கூட்டணியில் இடம் பிடிக்க, இவர்கள் எப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடிக்கின்றனர் பாருங்கள்.நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என தெரிந்தும், சட்டசபையில் மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவதும், பின், மசோதாவை கவர்னர் கிடப்பில் போட்டு விட்டார் என ஒப்பாரி வைப்பதும் ஏன்? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?நீட் ஒரு மோசடி தேர்வு. தனியார் மருத்துவ கல்லுாரிகள் கொள்ளையடிக்கின்றன என்று சொல்பவருக்கு, அந்த கொள்ளையை தடுக்க தான் நீட் தேர்வு என்பது தெரியவில்லை. ஆளுங்கட்சி புள்ளிகள் பல்வேறு மருத்துவ கல்லுாரிகளை நடத்தும் சூழலில், அதை எதிர்த்து குரல் கொடுக்கும் உங்கள் கட்சியை கூட்டணியில் சேர்த்து கொள்வர் என்று, எப்படி எதிர்பார்க்கிறீர்கள் அன்புமணி?நீட் தேர்வால், கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக இருக்கிறது என்கிறீர்கள். உண்மையில் நீட் தேர்வு அறிமுகமான பின் தான், கிராமப்புற மாணவர்கள் நன்கொடை கொடுக்காமல் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியுமா?தினமலர் நாளிதழில் அடிக்கடி, கூலி தொழிலாளி, துப்புரவு பணியாளர், பூ வியாபாரி, காய்கறி கடைக்காரர் போன்ற தொழிலாளர்களின் மகன், மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்த செய்திகளை படித்ததில்லையா? எனவே, உண்மை நிலை அறிந்து பேசுங்கள். நீட் தேர்வு விவகாரத்தில் விதண்டாவாதம் செய்ய வேண்டாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்