அதிகாரிகள் விமானிகள் பயிற்றுவிப்பாளர்களாக தேர்ச்சி
சென்னை: இந்திய மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பு படைகளை சேர்ந்த 54 வீரர்கள் இந்திய விமானப்படையின் தாம்பரம் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானிகள் பயிற்றுவிப்பாளர்களாக தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா 25 ஏப்ரல் 2025 அன்று நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்திய விமானப்படை மட்டுமின்றி இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் இரண்டு நட்பு நாடுகளின் அதிகாரிகளும் பயிற்சி நிறைவு செய்தவர்களில் அடங்குவர். தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள விமானிகள் பயிற்சிப்பள்ளி இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. தற்போது இதில் பட்டம் பெற்றுள்ள அதிகாரிகள் இப்பள்ளியின் 158வது தொகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் கடந்த 24 வாரங்களாக கடுமையான கல்வி மற்றும் விமானி பயிற்சிகளை பெற்று வந்ததுடன் அவ்வப்போது நடத்தப்பட்ட தேர்வுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இப்பாதுகாப்பு அதிகாரிகளின் பட்டமளிப்பு விழாவில் இந்திய விமானப்படையின் பயிற்சி கமாண்ட் மூத்த அதிகாரி ஏர் மார்ஷல் தேஜ்பீர் சிங் தலைமை விருந்தினராக பங்கேற்று பயிற்சி நிறைவுக்கான சான்றிதழ்களை வழங்கினார். தாம்பரம் விமானப்படை நிலையத்தின் விமானிகள் பயிற்சி பள்ளி தலைவர் குரூப் கேப்டன் கேபி சிங் இப்பயிற்சி வகுப்பின் சாதனைகளை விளக்கினார். நிகழ்ச்சியில் பேசிய தலைமை விருந்தினர் ஏர்மார்ஷல் தேஜ்பீர் சிங், பயிற்சி நிறைவு செய்த அதிகாரிகளை பாராட்டியதுடன் பயிற்சி பள்ளி குழுவினரையும் வாழ்த்தினார். பயிற்சி நிறைவு செய்த அதிகாரிகள் இந்திய விமானப்படை படையின் எதிர்காலத்தை மேலும் மெருகேற்றும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு அவர் கோப்பைகளையும் விருதுகளையும் வழங்கினார். பயிற்சியின் அனைத்து அம்சங்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக வழங்கப்படும் புகழ் வாய்ந்த மஜீத்தியா விருதை ஸ்குவாட்ரன் லீடர் சுபம் பண்டாரி பெற்றார். இந்திய விமானப்படை தளபதியின் பெயரிலான இரு வேறு பிரிவுகளுக்கான கோப்பைகளை ஸ்குவாட்ரன் லீடர் விக்ரந்த் பெனிவால், ஸ்குவாட்ரன் லீடர் ஆகாஷ் ஆகியோர் வென்றனர். ஏரோபேட்டிக்ஸ் பிரிவில் சாதித்த ஸ்குவாட்ரன் லீடர் தீபக் குர்ஜர், கமடோர் கமாண்டண்ட் விருதை பெற்றார். ஸ்குவாட்ரன் லீடர் அபூர்வ யாதவ் சிறந்த பயிற்சி உத்தியை கையாண்டமைக்காக திபாக் கோப்பையை பெற்றார். விமானதள தரைப்பணிகள் தொடர்பான பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற ஸ்குவாட்ரன் லீடர் சுபம் பண்டாரி மற்றும் அனைத்து நிலைகளிலும் இரண்டாவது இடம் பிடித்த லெப்டினெண்ட் கமாண்டர் ஆரம்ப் ஷர்மா ஆகியோருக்கு ஏர் ஆபீசர் கமாண்டிங் இன் சீப் விருது வழங்கப்பட்டது.சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் செயல்பட்டு வரும் விமானிகள் பயிற்சி பள்ளி 75 ஆண்டுகால அனுபவமும் சிறந்த பாரம்பரியமும் கொண்டதாகும். இதிலிருந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ் வாய்ந்த விமானிகள் பயிற்சி பெற்று பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.