அலைபாயும் மனம்; அதிகபட்ச ஆபத்து!
திருப்பூர்: ஆண்களுக்கு சளைத்தோர் அல்ல பெண்கள்... என்ற வார்த்தை, நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. விவசாயம் துவங்கி, விண்வெளி வரை, பெண்களின் பங்களிப்பு என்பது, வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆளுமைப் பண்பையும் பெண்கள் வேகமாக பெற்று வருகின்றனர். பெண்களின் அபார வளர்ச்சிக்கு கல்லுாரி படிப்பு அச்சாரமாக இருக்க வேண்டும்; கல்லுாரிகள், ஆணிவேராக இருக்க வேண்டும்.அந்த வகையில், திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், மாணவியர் மத்தியில் ஆளுமைப்பண்பை வளர்க்கும் விதமாக, பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான நிர்வாகிகள், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது.கல்லுாரி முதல்வர் வசந்தி, வரவேற்க, கல்லுாரி தலைவர் செந்தில்நாதன், தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, பாரதியார் பல்கலை, பாரதியார் மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பள்ளி இணைப் பேராசிரியர் பரணி பேசுகையில்,கல்லுாரி கல்விக்குள் நுழையும் போது, ஓட்டளிக்கும் உரிமையை பெறுகிறீர்கள். எதிர்காலத்தில் விரும்பும் துறையை தேர்ந்தெடுக்கும் உரிமையும் உங்களுக்குண்டு. அதே நேரம் மனதை அலைபாயவிடாமல், ஒருநிலைப்படுத்தி, குறிப்பிட்ட குறிக்கோள்களை வகுத்து, அதை நோக்கி மட்டுமே செயல்பட வேண்டும். அப்போது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும். ஆக்கப்பூர்வமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மனதை அலைபாயவிடுவது, உடல் மற்றும் மன ரீதியாக, அதிகபட்ச பாதிப்பை தந்துவிடும் என்பதை உணர வேண்டும் என்றார்.டில்லி, லிவர்பூல் நிறுவன தெற்காசிய மேலாளர் ஏக்தா சபர்வால் பேசினார். பின், பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர். பேரவை தலைவராக தர்ஷிணி, துணைத் தலைவராக ரிச்சிகா ஸ்ரீ, செயலாளராக ஆதிரா, பொருளாளராக மோனிகா, கலைப்பிரிவு செயலாளராக திவ்யா, அறிவியல் பிரிவு செயலாளராக சப்ரின் பாத்திமா, முதுகலை செயலாளராக அமுதா, விளையாட்டு செயலாளராக ேஹமாதேவி, இணை விளையாட்டு செயலாளராக கோபிகா மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாட்சியர் அர்சுஜபீன், கல்லுாரி தொடர்பு அலுவலர் கார்த்திகைச் செல்வி, திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க கூட்டுறவு சார் பதிவாளர் நிவேதா, செயலாளர் முத்துரத்தினம் ஆகியோர் பேசினர். மாணவி தர்ஷினி நன்றி கூறினார்.ஒளிர்வதற்கு என்ன தேவை? நிகழ்ச்சியின் துவக்கத்தில் மேடையில் இருந்த குத்துவிளக்கில், சிறப்பு விருந்தினர்கள் ஒளியேற்றினர். காற்று வீசியதால், திரியில் எரிந்த தீபம் அணைந்துக் கொண்டே இருந்தது. உடனடியாக, கல்லுாரி முதல்வர், திரிகள் அனைத்தையும் ஒருமித்து குவித்து வைக்க, தீபம் காற்றிலும் அணையாமல் ஒளிர்ந்தது. இதை சுட்டிக்காட்டி பேசிய இணை பேராசிரியர் பரணி, மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்தும் போது, அது வெற்றியை தரும்; ஒளியை தரும் என்றார்.