தலைமுறை மாற்றத்தை கொடுப்பது கல்வி
சென்னை: “ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி, ஒரு தலைமுறையை மாற்றும் சக்தி படைத்தது,” என, கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமார் தெரிவித்தார்.நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கும் புத்தகக்காட்சியின் வெளி அரங்கில், நேற்று முன்தினம் மாலை நடந்த நிகழ்வில், கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமார், 'தலைமுறை மாற்றும் கல்வி' எனும் தலைப்பில் பேசியதாவது:இங்கிலாந்து அரண்மனையில், படிக்காத தொழிலாளியின் மகனுக்கு கிடைத்த கல்வி தான், 'பென்சிலின்' மருந்தை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் பிளம்பிங் உருவாக காரணம்.ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி, ஒரு தலைமுறையை மாற்றும் சக்தி படைத்தது. சில பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு இல்லையேல், இன்றைய பல வெற்றியாளர்கள் இல்லை. படிக்காத காமராஜரின் முன்னெடுப்பால் பல அரசு பள்ளிகள் உருவாக்கப்பட்டு, மதிய உணவு வழங்கியதால் தமிழகம் படிப்பறிவில் உயரத் துவங்கியது.குழந்தைகளை வளர்ப்பதில் ஆசிரியர்களை விட பெற்றோருக்கே அதிக பங்கு உள்ளது. எனவே, அவர்கள் முன், நம்பிக்கை மற்றும் அன்புடன் வாழ்ந்து காட்ட வேண்டும். நம் நடத்தை தான், குழந்தைகளிடையே மாற்றத்தை உருவாக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.