வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு, மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 600 ரூபாய்; தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு, 600 ரூபாய்; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 750 ரூபாய்; பட்டதாரிகளுக்கு 600 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினருக்கு, 40 வயதிற்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. மனுதாரரின் குடும்ப வருமானம், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான சான்று தேவை இல்லை.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிவுற்று, முறையாக புதுப்பித்திருப்பின் மற்றும் மாற்றுத்திறனாளி எனில், பதிவுசெய்து ஓராண்டு முடிவுற்று காத்திருப்போர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெறலாம். அதற்கான விண்ணப்ப படிவத்தை, http:// tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய சான்றுகளுடன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள அலுவலகத்திற்கு வரும், 29க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.