வேலை தேடாதீர்கள்... வேலை கொடுங்கள்!
திருப்பூர்: முன்பெல்லாம் படித்து முடித்துவிட்டு வேலை தேடுவது பெரிய விஷயமாக இருந்தது; ஆனால் இன்று வேலைகள் சுலபமாகக் கிடைக்கின்றன.அப்படி இருந்தும், மாணவர்கள் பலர் தங்களுக்கு கிடைக்கும் வேலைகளில் சேர்வதில்லை. காரணம், ஒரு நிறுவனத்தின் நான்கு சுவற்றுக்குள் கொடுத்து வைக்கும் வேலையை மட்டும் செய்யும் நிலையைத் தாண்டி, இன்றைய தலைமுறை மாணவர்களின் திறமை எங்கோ உயர்ந்து நிற்கிறது.அவர்களின் இந்தத் திறனை சுய தொழிலாக மாற்றுவதற்கு இதுவே சரியான தருணம். ஆசிரியர்கள் காட்டும் வழியை மாணவர்கள் நிச்சயம் பின்பற்றுவார்கள். எனவே, கல்லுாரி முதல்வர்களும் பேராசிரியர்களும் மாணவர்களுக்குச் சரியான பாதையை வழிகாட்ட வேண்டும்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடந்த கருத்தரங்கில், மாவட்ட தொழில்மைய துணை இயக்குனர் ராஜேஸ்வரி கல்லுாரி முதல்வர்கள் மத்தியில் பேசிய யதார்த்த வார்த்தைகள் இவை.முத்தான திட்டங்கள் துணை இயக்குனர் லலிதாம்பிகா தலைமையில், திட்ட மேலாளர் பிரபாகரன் முன்னிலையில் நடந்த இந்த முகாமில், புதிய தொழில் தொடங்க நினைக்கும் மாணவர்களுக்காக அரசு வழங்கும் 3 திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து ராஜேஸ்வரி கூறியதாவது:பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தகத் தொழிலில் இறங்க விரும்பும் எட்டாம் வகுப்பு படித்த, 55 வயதுக்கு உட்பட்ட தமிழக இளைஞர்களுக்கு, (யு.ஒய்.இ.ஜி.பி.,) திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் பரிந்துரைக்கப்பட்டு, அதில் அதிகபட்சமாக 3.75 லட்சம் ரூபாய் வரை அரசே மானியமாக வழங்குகிறது. இதற்கு மிகக் குறைந்த ஆவணங்களே போதுமானது.உற்பத்தி சார்ந்த தொழில்களைத் தொடங்க நினைக்கும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 'அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின்' கீழ் உற்பத்தி மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டிற்குமே மிக அதிகமாக 35 சதவீத மானியம் அள்ளிக் கொடுக்கப்படுகிறது.இதர பிரிவினராக இருந்தால், 'நீட்ஸ்' திட்டத்தின் மூலம் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.இதற்கு அரசு தரப்பில் 25 சதவீத மானியம் தரப்படும் நிலையில், தொழில் தொடங்க விரும்பும் மாணவர் தன் பங்களிப்பாக வெறும் 5 சதவீத தொகையை முதலீடு செய்தால் மட்டும் போதும். ஆனால், இத்திட்டம் வர்த்தகம் சார்ந்த தொழில்களுக்குப் பொருந்தாது.