உள்ளூர் செய்திகள்

பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்புத்திறன் பயிற்சி

திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில், 2026-2027ம் கல்வியாண்டில், படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள, 1,950 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் தெரிவித்துள்ளார்.அவரது, செய்திக்குறிப்பு:கடந்த 2025-2026ம் கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில், 6 முதல் 9ம் வகுப்பு வரை பின்தங்கிய நிலையில் இருந்த, 26,151 மாணவர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்பட்டது. இதில், 24,201 மாணவர்கள் கற்றல் அடைவு நிலையை அடைந்தனர்.கடந்தாண்டு முழுமையான அடைவு நிலையை எட்டாத மற்றும் நடப்பு கல்வியாண்டில் மீதமுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள, 1,950 மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு இந்த ஆண்டும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட அளவில், 14 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.வட்டார வள மையங்களில் உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த சிறப்புப் பயிற்சிகள் நேரடியாக வழங்கப்பட உள்ளன.இப்பள்ளிகளில் மாணவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்குவதற்கு தன்னார்வலராக பணிபுரிய விருப்பமுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களை நேரடியாக அணுகி விருப்பத்தை தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்