உள்ளூர் செய்திகள்

ஆப்ரிக்காவில் இந்திய பயிற்சி நிலையங்கள்

ஆப்ரிக்க யூனியனுடன்(ஏ.யு) இந்தியா மேற்கொண்டிருக்கும் கண்டம் நிலையிலான ஒத்துழைப்பின்படி, அக்கண்டத்தின் பல பகுதிகளில் மொத்தம் 19 மனித ஆற்றல் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. உகாண்டாவின் வெளிநாட்டு வணிக நிறுவனம் மற்றும் போஸ்ட்வானாவின் டயமன்ட் நிலையம் போன்றவை அந்த பயிற்சி நிலையங்களுக்கு சில உதாரணங்கள். மேலும் மொத்தம் 19 நிலையங்களுக்கான இடங்கள், இந்தியா மற்றும் ஆப்ரிக்கா தரப்பில் தேர்வு செய்யப்பட்டுவிட்டன. இந்த பயிற்சி நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களில், வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய நிறுவனம்(ஐ.ஐ.எப்.டி.), இந்திய கல்வி ஆலோசகர்கள் நிறுமம்(இ.சி.ஐ.எல்.) மற்றும் இந்திய டயமன்ட் நிறுவனம் போன்றவை முக்கியமானவை. இந்த பயிற்சி மையங்கள் ஆப்ரிக்காவில் ஏற்கனவே தங்கள் வேலையை துவக்கிவிட்டன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்த இலக்கான 19 பயிற்சி நிலையங்களையும் அமைக்கும் பணி முடிந்துவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுத்தவிர, இந்தியாவின் தேசிய சிறு நிறுவனங்கள் கழகம்(என்.எஸ்.ஐ.சி.), இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் மற்றும் கட்டிடப் பொருட்கள் - தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சில் போன்றவை, ஆப்ரிக்காவில், விடுமுறைகால பயிற்சி மையங்கள் மற்றும் மனித குடியேற்ற நிறுவனங்கள் போன்றவைகளை அமைப்பதற்கு உதவ இருக்கின்றன. ஆப்ரிக்க மக்களுக்கு டெலி-கல்வி மற்றும் டெலி-மருத்துவம் போன்ற அம்சங்களை வழங்கும்பொருட்டு, இந்திய உதவியுடன் தொடங்கப்பட்ட "பேன்-ஆப்ரிக்கா இ-நெட்வொர்க்" சேவையானது, ஆப்ரிக்க கண்டத்திற்கான இந்திய உதவியின் ஒரு முக்கிய அம்சமாக குறிப்பிடப்படுகிறது. இந்த நெட்வொர்க்கிற்கு, சமீபத்தில் ஐரோப்பாவின் ஒரு உயர்ந்த விருதும் வழங்கப்பட்டது. ஆப்ரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வணிகம் சுமார் 4 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் எண்ணெய் வளம் மற்றும் பிரமாண்டமான உள்கட்டமைப்பு திட்டங்களில், இந்தியாவின் போட்டி வல்லரசான சீனா கவனம் செலுத்தும் வேளையில், இந்தியாவோ, மனித ஆற்றல் மேம்பாட்டு துறைகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்