இக்னோவின் பி.எட்., படிப்பில் பிரெஞ்சு
இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகம் இன்று தமிழ்நாட்டிலும் பரவலாக அனைவராலும் அறியப்படும் பெயராக மாறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில வழியில் இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பது பற்றி கிராமப்புற மாணவர்களுக்கு யோசனை இருந்தாலும் இன்று போட்டி போட்டுக் கொண்டு பல்லாயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் இதன் படிப்புகளில் சேருவதைக் காண்கிறோம். நவீன உத்திகளுடனும் புதுமையான முறைகளிலும் கல்வியை நம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கும் இக்னோவின் மற்றொரு புதிய முயற்சியாக பி.எட்., படிப்பில் பிரெஞ்சு என்னும் படிப்பு அறிமுகமாகவுள்ளது. இதில் இக்னோவுடன் பிரெங்சு தூதரகமும் அந்நாட்டிலுள்ள கிரெனோபிள் பல்கலைக்கழகமும் இணைந்துள்ளன. இக்னோவின் பி.எட்., படிப்பில் பிரெஞ்சு மொழியை ஒரு அங்கமாக மாற்றிடும் உடன்படிக்கை ஒன்றில் சமீபத்தில் இக்னோ, பிரெஞ்சு தூதரகம் மற்றும் கிரெனோபிள் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்துள்ளன. இக்னோ நடத்தவுள்ள இந்தப் படிப்பிற்கான பாடத்திட்டத்தை பிரெஞ்சு தூதரகம் வங்கதேசம், பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஏமன், ஐக்கிய அரேபியக் குடியரசு, குவைத், ஓமான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்ய முனைந்துள்ளது. பிரெஞ்சு மொழி, கலாசாரம் மற்றும் இலக்கியங்களில் உலக அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இது அமையவுள்ளது.