ஐ.ஐ.டி. கல்வி கட்டணம் உயருமா?
மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலால், மும்பை ஐ.ஐ.டி. தலைவர் அணில் ககோட்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, ஐ.ஐ.டி. கல்வி கட்டணத்தை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரை, ஜனவரி 21 ம் தேதி நடக்கும் ஐ.ஐ.டி. கவுன்சில் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் கட்டணம் உயரும். அந்த கூட்டத்தில் ககோட்கர் இதுசம்பந்தமாக உரை நிகழ்த்தக்கூடும். ஐ.ஐ.டி -களின் உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பான ஐ.ஐ.டி. கவுன்சிலின் கூட்டத்தில், அந்த உயர்கல்வி நிறுவனங்கள் அரசை அதிகமாக சார்ந்திராமல், தங்களின் நிதி ஆதாரத்தை தாங்களே பெருக்கிகொள்ளும் வகையில் ஒரு விரிவான நிதி திட்டத்தை ககோட்கர் குழுவானது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரியளவில் சுயாட்சி பெறுவதற்கு ஐ.ஐ.டி -களை அனுமதிக்கும் வகையில் இந்த பரிந்துரை அமைந்துள்ளது. ஆனால் கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக கொடுக்கப்படும் எந்த பரிந்துரையும், ஐ.ஐ.டி. உயர்நிலை கூட்டங்களில் பெரிய எதிர்ப்பை சந்திக்கும் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று. அதேசமயத்தில், ஐ.ஐ.டி -களுக்காக, பல தனிப்பட்ட மூலங்களிலிருந்து நிதியை திரட்டும் நோக்கில், ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தும் பரிந்துரை ககோட்கர் கமிட்டியால் முன்வைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் டாக்டர். டி. ராமசாமி தலைமையில் அமைக்கப்பட்ட மற்றொரு கமிட்டியானது, ஐ.ஐ.டி. தேர்வுகளில் சீர்திருத்தம் செய்வது தொடர்பான பரிந்துரைகளை இக்கூட்டத்தில் அளிக்கும் என்று தெரிகிறது. ஐ.ஐ.டி -களில் இடம்பெற ஒரே நுழைவுத்தேர்வை நடத்துவது என்ற மத்திய அரசின் திட்டத்தை 7 ஐ.ஐ.டி -கள் கடந்த வருடம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்த நிலையில், ராமசாமி கமிட்டியின் அறிக்கை வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.