உள்ளூர் செய்திகள்

சமூக அறிவியல் புத்தகத்தில் தவறு

சென்னை: தெலுங்கு மொழியில் உள்ள சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தவறுகள் இருந்தால், அதை வாபஸ் பெற்று, புதிய புத்தகத்தை வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சஞ்சீவராவ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தெலுங்கு மொழியில் ஆறாவது வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகம் கடந்த ஆண்டு தயாரானது. இதில் ஏராளமான தவறுகள் உள்ளன. இதை மாணவர்களுக்கு பரிந்துரைக்கக் கூடாது. இப்பாடப்புத்தகத்தை ஆய்வு செய்யக் கோரி மனு அனுப்பினேன். புதிய பாடப்புத்தகம் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.சுப்ரமணியன், அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் சங்கரன் ஆஜராகினர். ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: ஆறாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு தவறையும் தெளிவாக குறிப்பிட்டு, பள்ளி கல்வித் துறைக்கு புதிய மனுவை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால், அதை பள்ளி கல்வித் துறை பரிசீலித்து, தகுந்த முடிவை எடுக்க வேண்டும். மனுதாரர் சுட்டிக்காட்டியபடி, பாடப்புத்தகத்தில் அதிக தவறுகள் இருந்தால், அவற்றை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். குறைகள் அனைத்தையும் சரிசெய்து, புதிய பாடப்புத்தகத்தை வெளியிட வேண்டும். இவ்வாறு, ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்