உள்ளூர் செய்திகள்

அச்சுப்பிழை கேள்விக்கு மட்டுமே மதிப்பெண்

பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாளில், அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறினார். பிளஸ் 2 மாணவர்களுக்கு நடந்த கணிதத் தேர்வில் பல குளறுபடிகள் இருந்தன. அதில் ஆறு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 47வது கேள்வி பாடப் புத்தகத்தில் இல்லை எனவும், இதே பகுதியில் 51வது கேள்வியில் அச்சுப்பிழை ஏற்பட்டிருந்ததால் மாணவர்களால் பதிலளிக்க முடியவில்லை என்றும் கணித ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், பல கேள்விகள் கடினமாக இருந்தாக மாணவர்களும் தெரிவித்தனர். தவறான கேள்வி மற்றும் பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்வி ஆகியவை குறித்து அனுபவம் வாய்ந்த கணித பாட ஆசிரியர்களிடம் தேர்வுத்துறை அதிகாரிகள் கருத்துக்களை கேட்டறிந்தனர். மேலும், கணிதத் தேர்வுக்கு கீ-ஆன்சர் தயாரிக்கும் குழுவை தேர்வுத்துறைக்கு அழைத்து சர்ச்சைக்குரிய கேள்விகள் குறித்து இயக்குனர் வசுந்தரா தேவி கேட்டறிந்தார். அதன்பின் இயக்குனர் கூறியதாவது, "சில பகுதிகளில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் அச்சுப்பிழை இருந்ததாக தேர்வுத்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனவே அச்சுப்பிழை கொண்ட கேள்வித்தாளை வாங்கிய மாணவர்கள், தங்களது பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேள்வித்தாளை ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அந்த கேள்வித்தாள்களை தேர்வுத்துறைக்கு அனுப்பி வைப்பர். அதன்பின், கேள்வித்தாளை ஆய்வு செய்து அச்சுப்பிழை இருந்தால் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்படும். சில கேள்விகள் பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்வி என கூறப்பட்டது. பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்வியாக இருப்பதில் எந்தவித தவறும் இல்லை. பாடத்திட்டத்திற்குள் இல்லாத கேள்வியை கேட்டால் தான் தவறு. எனவே, பாடத்திட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கணிதத் தேர்வில் வேறு எந்தவித பிரச்னைகளும் கிடையாது" இவ்வாறு வசுந்தரா தேவி கூறினார். இதற்கிடையே, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா, நேற்று மாலை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்குச் சென்று தேர்வுத்துறையின் பணிகள் குறித்தும், நடந்துவரும் தேர்வுகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது, கணிதப் பாட தேர்வில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து செயலர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்