நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
திருநெல்வேலி: போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். தஞ்சாவூரில் தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படுவதை கண்டித்து, அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், நெல்லையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது, மாணவர்கள் ரோட்டில் படுத்து உருண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில், எட்டு மாணவர்கள் படுகாயமுற்றனர். மாணவர்களின் கல் வீச்சில் ஆறு போலீசார் காயமுற்றனர். போலீசார் கல்லூரிக்குள் நுழைந்து தடியடி நடத்தியதைக் கண்டித்து, சட்டக்கல்லூரி முன்னர் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக பாளை., ஜான்ஸ் கல்லூரி, நெல்லை இந்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.