புதிய இசைப் படிப்புகள் தொடக்கம்
சென்னை பல்கலைக்கழகத்தில், தமிழ் இசையை மேம்படுத்தும் பொருட்டு, புதிய இசைப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ் இசை சங்கத்தால் நடத்தப்படும் தமிழ் இசைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம், "ரித்மாலஜி படிப்பில் எம்.ஏ. பட்டம் மற்றும் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் படிப்பில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. பட்டப் படிப்புகள் இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழ் இசைப் படிப்பிற்கு, தொழில் கல்வி அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கேட்டு, யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. ஆகிய அமைப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்த அங்கீகாரம் கிடைத்தால் இந்த படிப்புகள் மேலும் வளர்ச்சியடையும். இன்றைய நிலையில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இசையைப் பற்றி மாணவர்கள் ஆர்வமாக படிப்பது குறைந்துவிட்டது. தேர்வின் பொருட்டே தமிழ் இலக்கியத்தை படிக்கிறார்கள். இதேநிலை தொடர்ந்தால், தமிழ் மொழியும், அதன் கலாச்சாரமும் பழைய நினைவுகளாகிவிடும். எனவே இந்த அவலநிலையைப் போக்க, கல்லூரிகளும், பல்கலைகளும் முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.