உள்ளூர் செய்திகள்

பிரிட்டனில் சிறந்த மேலாண்மைக் கல்வி

பிரிட்டனில் அதிக மாணவர்கள் விரும்பி பயிலும் வர்த்தக மற்றும் மேலாண்மை வகுப்புகளில், பிரகாசமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பொதுவானது முதல் சிறப்பு வாய்ந்த பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.  படித்த இளைஞர்களிடம், தற்போதைய நிறுவனங்கள் எந்தவிதமான திறமையை எதிர்பார்க்கிறதோ, அதனை பாடப் புத்தகங்களின் வாயிலாகவும், செயல்முறை பயிற்சியாகவும் அளிக்கிறது இந்த பாடப் பிரிவுகள். பிரிட்டனில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் உள்ள விளம்பரத் துறை, நிர்வாகத்துறை, நிதி, சட்டம் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை என முக்கியமான துறைகளில் பணியாற்றுவதற்கும், மற்றவர்களுடன் போட்டி போடத் தேவையான அளவிற்கும் திறமையை உருவாக்கும் வகையிலும் இந்த பாடப்பிரிவுகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த மேலாண்மைக் கல்வி பட்டப்படிப்பை பெற்றவர்கள், ஒரு நிர்வாகத்தின் மிக முக்கியமான பொறுப்புகளான இயக்குநர், விளம்பரத் துறை நிர்வாகி, மேலாண்மை ஆலோசகர், நிதி மற்றம் வர்த்தக ஆலோசகராகவும் பணியாற்றும் வகையில் திறன் பெற்றிருப்பர். இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையோரம் அமைந்திருக்கும் பார்ன்மெளத் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் வர்த்தக பாடப்பிரிவுகள் பல்வேறு தர நிலைகளில் அமைந்துள்ளது. இளநிலை பட்டப்படிப்பான வர்த்தக படிப்பு 4 ஆண்டுகளைக் கொண்டதாகும். இந்த பாடப்பிரிவின் 2ஆம் ஆண்டு துவக்கத்திலேயே மாணவர்கள், தங்களுக்கு தனித்துவம் பெறும் ஒரு துறையை தேர்வு செய்ய அனுமதிக்கிறார்கள். அதாவது, நிர்வாகம், பொருளாதாரம், சர்வதேச வர்த்தம், சட்டம், விளம்பரத் துறை, திட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து மாணவர்கள் அதில் நிபுணத்துவம் பெறலாம். படிப்பையும் கடந்து, மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும், தங்களது பாடப்பிரிவிற்கு தொடர்புடைய ஒருங்கிணைந்த திட்டங்கள், வர்த்தக செயல்பாடுகளின் மாதிரிகள் போன்றவற்றை உருவாக்கி தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள். மேலும், இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களின் ஆலோசனைகளும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும். பாடப்பிரிவில் தொழிற் அமைப்புகளுக்குச் சென்று பணியாற்றுதல் போன்றவையும் அடங்குவது, மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் மிகச் சிறந்த நிபுணராக கல்வி நிலையத்தை விட்டு வெளியேற வழி வகுக்கின்றன. அதாவது, ஒவ்வொரு மாணவரும், தனது மூன்றாம் ஆண்டில், சுமார் 40 வாரங்கள், ஒரு நிர்வாகத்தில் பணியாற்றி அதற்கான சான்றிதழைப் பெற வேண்டியது அவசியமாகிறது. படிக்கும் காலத்தில் பணியாற்றும் பயிற்சியை அளிக்கும் பார்ன்மெளத் போன்ற பல்கலைக்கழகங்கள், தங்களது நிர்வாகத் தொடர்பில் உள்ள பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களிலேயே, தங்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருகின்றன என்பதுதான் மிகவும் சிறப்பு வாய்ந்த செய்தியாகும். ஐபிஎம், நோக்கியா, பானசோனிக், ஜெராக்ஸ் என புகழ்பெற்ற பல நிறுவனங்களில் எங்கள் மாணவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது எமது நிறுவனத்திற்கும் பெருமையான விஷயம் என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் மிலேனா போபேவா. வெறும் மேலாண்மைக் கல்வி மட்டும் அல்லாமல், பல்வேறு வர்த்தக பாடப்பிரிவுகளை பார்ன்மெளத் பல்கலைக்கழகம் அளிக்கிறது. அதாவது, சர்வதேச வர்த்தக மேலாண்மை இளநிலை பட்டப்படிப்பை பகுதி நேரமாகவும், ஆன்லைனிலும், ஆன்லைன் மற்றும் வகுப்புகள் எடுக்கும் விதத்திலும் மாணவர்களுக்கு வழங்குகிறது. பணியாற்றிக் கொண்டே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் எங்களது பாடப்பிரிவுகளை வழங்குகின்றோம். பணியாற்ற மட்டும் அல்லாமல், கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்களும், இதுபோன்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கின்றனர் என்றார். பிரிட்டனில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், இளநிலை பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்குத்தான் முதுநிலை பட்டப்படிப்பை வழங்குகின்றன. இளநிலை பட்டப்படிப்பில் தாங்கள் எடுத்தத் துறையில் மேலும் தனித்துவம் பெற நினைக்கும் மாணவர்கள், தாங்கள் படித்த பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை எடுத்துப் படிக்கின்றனர். இதுமட்டும் அல்லாமல், பல்வேறு வகையான பாடப்பிரிவுகளை தேசிய அளவிலான கல்வி நிலையங்களும் மாணவர்களுக்கு வழங்குகின்றன என்று அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்