அதிகளவில் உயர்கல்வி கற்கும் பெண்கள்
தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களில் 47 சதவீதம் பேர் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "நாட்டில், பல்கலைக்கழகங்களில் சேர்ந்து, உயர்கல்வி படிக்க பதிவு செய்துள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்றபோது, உயர்கல்வி பெற பதிவுசெய்த பெண்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. தற்போது இது 2010 - 2011ம் ஆண்டின் துவக்கத்திலேயே 41.60 சதவீதமாக அதிகரித்துள்ளது" என்றனர். கடந்த 2000 - 2001ம் ஆண்டில், நாட்டில் உயர்கல்வி பெற பல்கலைக்கழகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்து 99 ஆயிரம். இவர்களில் பெண்கள் 33 லட்சத்து 6 ஆயிரம் பேர். அதாவது 39 சதவீதம். இது, 2008 - 2009ம் ஆண்டில் 41.4 சதவீதமாக அதிகரித்தது. 2000 - 2001ம் ஆண்டுக்கு பின், தொடர்ந்து உயர்கல்விக்கு பதிவு செய்யும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. பீகார் குறைந்த சதவீதத்துடன் பட்டியலில் பின்தங்கியுள்ளது. பெண்கள் அதிகளவில் உயர்கல்வி படிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை, மத்திய மனிதவளத்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. உயர்கல்வியில் ஆண்கள், பெண்கள் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இத்துறையின் முக்கிய நோக்கம் என்று இத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டில், கடந்த 2000 - 2001ம் ஆண்டில் மொத்தம் ஆயிரத்து 578 பெண்கள் கல்லூரிகள் இருந்தன. இது, 2008 - 2009ம் ஆண்டில், 2 ஆயிரத்து 565 பெண்கள் கல்லூரிகளாக அதிகரித்துள்ளன.