கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை
சென்னை: ஆசிரியர் பணிக்கு தேர்வாகியும், தேர்தல் காரணமாக பணி நியமனம் கிடைக்காததால், "கைக்கு வந்தது, வாய்க்கு எட்டலையே" என புதிய ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறைக்கு 2,804 பட்டதாரி ஆசிரியர்கள், 175 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், மத்திய சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் இடைநிலைக் கல்வி) திட்டத்திற்கு 1,200 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு 1,155 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 5,334 ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை, கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இவர்களில் 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு கடிதங்கள் அனுப்பப்பட்டன. மற்றவர்களுக்கு இன்னும் அனுப்பவில்லை. அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், மேற்கொண்டு எந்தவிதமான பணிகளையும் தேர்வு வாரியம் செய்யவில்லை. மேலும், தேர்வு கடிதம் அனுப்பப்பட்ட 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமன உத்தரவு வழங்க பள்ளி கல்வித்துறை முயற்சித்தது. ஆனால், தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதால் "போஸ்டிங்கை" தள்ளி வைத்தனர். தற்போது தேர்தல் முடிந்து 10 நாட்கள் கடந்த நிலையில், இப்போதாவது தேர்வு கடிதங்கள் கிடைக்குமா, பணி நியமன உத்தரவு கிடைக்குமா என்று தெரியாமல் தேர்வு பெற்றவர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்திற்கு தேர்வானவர்களுக்கு, ஏற்கனவே தேர்வு கடிதங்கள் அனுப்பப்பட்டு விட்டதால், அவர்களுக்கு மட்டும் பணி நியமன உத்தரவுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, துறை செயலரின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனப் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்ட ஒன்று என்பதை சுட்டிக்காட்டி, பணி நியமன உத்தரவுகள் வழங்க தேர்தல் கமிஷனின் அனுமதி பெறும் முயற்சி தற்போது நடந்து வருகிறது. அனுமதி கிடைத்துவிட்டால் இம்மாத இறுதிக்குள் 1,200 ஆசிரியர்களுக்கும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என தெரிகிறது.