உள்ளூர் செய்திகள்

நோட்டுப் புத்தகங்கள் விலை உயர்வு

சிவகாசி: மூலப்பொருட்களின் விலை உயர்வு, காகித தட்டுப்பாட்டால், பாட நோட்டுகளின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநில தேவையின் 70 சதவீத பாட நோட்டுகள், சிவகாசியில் தயாராகின்றன. இந்த ஆண்டு காகித தட்டுப்பாடு, மூலப்பொருட்களின் விலை உயர்வால், பாடநோட்டுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 46 ஆயிரம் ரூபாயாக இருந்த, "மேப்லித்தோ பேப்பர்" தற்போது, டன் 52 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம், உற்பத்தியை, அதிகளவில் ஏற்றுமதி செய்வதால் உள்ளூர் நோட்டு தயாரிப்பாளர்களுக்கு பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டி.எம்.பி.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர்களுக்குக் கூட, இந்த ஆண்டு 50 சதவீதம் அளவிலேயே "சப்ளை" செய்துள்ளனர். நோட்டு அட்டைக்கு பயன்படுத்தும் ரேப்பர், கடந்தாண்டு கிலோ 32 ரூபாயாக இருந்தது. தற்போது 37 முதல் 41 ரூபாயாக உயர்ந்துள்ளது. கிலோ 17 ரூபாயாக இருந்த பாலி போர்டு அட்டை கிலோ 21 ரூபாயாக உயர்ந்துள்ளது. பைண்டிங்கில் பயன்படுத்தும், "காடா கிளாத்" ஒரு மீட்டர் 14லிருந்து 22 ரூபாயாக உயர்ந்துள்ளது. பைண்டிங், "ஸ்டேபிளர் பின்" ஒரு காயல் 123லிருந்து 175 ரூபாயாக உயர்ந்துள்ளது. லேமினேசன் பிலிம் கிலோ 98லிருந்து 110 ரூபாயாகவும், பைண்டிங் பசை ஒரு கிலோ 146லிருந்து 210 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மின் வெட்டால் கூடுதல் செலவு: மின்வெட்டை சமாளிக்க, 63 எச்.பி., திறன் கொண்ட ஜெனரேட்டரை ஒரு மணிநேரம் இயக்க 7 லி. டீசல் செலவாகிறது. டீசலுக்காக தினமும் 1,000 ரூபாய் ஆகிறது. கடந்தாண்டு ஒரு நோட்டுக்கு தயாரிப்பு கூலி ஒன்றரை ரூபாயாக இருந்தது. தற்போது 1.75 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவரை நோட் புக் தயாரிப்பிற்கு வரி விதிப்பு இல்லை. தற்போது மத்திய கலால் வரியாக, 1 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு 24 ரூபாய்க்கு விற்ற ஒரு குயர் நோட்டு, தற்போது 26 ஆகவும், 12க்கு விற்ற ஒரு குயர் சிறிய நோட்டு 14 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் பாட நோட்டுகள் அத்தியாவசியம் என்பதால், கடந்த ஆண்டை விட 25 சதவீத ஆர்டர் அதிகரித்துள்ளது. நோட்டு தயாரிப்பாளர்கள் கூறுகையில், "தட்டுப்பாடின்றி காகிதம் கிடைத்தால், மே மாதத்தில் பணிகளை முடித்து விடுவோம். தட்டுப்பாடு, மூலப்பொருள் விலை உயர்வால் இந்தாண்டு 20 சதவீத விலை உயர்வை தவிர்க்க இயலவில்லை" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்