தூத்துக்குடி வருகிறது புத்தக கப்பல்
தூத்துக்குடி: "லோகோஸ் கோப்" என்ற பிரமாண்ட புத்தக கப்பல், மே 12ம் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வருகிறது. ஜெர்மனியில் 1973ல் கட்டப்பட்ட இந்த கப்பலின் வடிவமைப்பில், பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. 32.50 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில், 45 நாடுகளைச் சேர்ந்த 400 மாலுமிகள் பணிபுரிகின்றனர். பொழுதுபோக்கு, விளையாட்டு, அறிவியல், கலை, ஆன்மிகம், பொது அறிவு உள்ளிட்ட 5,000 தலைப்புகளில், 5 லட்சம் புத்தகங்களைக் கொண்ட இந்த கப்பல், மே 12ம் தேதி, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வருகிறது. மே 23ம் தேதி வரை இக்கப்பலை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்கு கட்டணமாக நபருக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படும். 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு கட்டணம் கிடையாது. ஆனால், அவர்கள் கட்டாயமாக பெற்றோருடன் தான் வர வேண்டும்.உலக அறிவு, உதவி, நம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்தி இந்த கப்பல் இங்கு வரவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இக்கப்பலிலுள்ள புத்தகங்களை பொதுமக்கள் விலைக்கு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இக்கப்பல் கொச்சி, விசாகப்பட்டினம் செல்கிறது.