மாணவர்கள் உருவாக்கிய மாதிரி ஹெலிகாப்டர்
பழநி: பழநி சுப்ரமண்யா பொறியியல் கல்லூரி மாணவர்கள், மாதிரி ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளனர். இக்கல்லூரியின் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் கார்த்திகேயன், மதுசூதனன், நந்தகோபால், சதீஸ்பாபு ஆகியோர் தங்களது ஆய்வுத் திட்டத்தில் (புராஜெக்ட் ஒர்க்) ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளனர். டபுள் ஸ்ட்ரோக் பெட்ரோல் இன்ஜின், இரும்புத்தகடு, இரும்பு பைப்களாலான பாகங்களை கொண்டு, இரண்டு லட்ச ரூபாய் செலவில் 20 நாட்களில் ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் இறக்கைகள் சுற்றும். ஆனால் பறக்காது. பைலட் இருக்கை மட்டும் உண்டு. இதுகுறித்து மாணவர் நந்தகோபால் கூறுகையில், "இன்டர்நெட் மூலம் வெளிநாடுகளில் ஹெலிகாப்டர் ஒர்க்ஷாப்கள் இயங்கும் விதத்தை பார்த்தோம். அதிலிருந்து தகவல் சேகரித்தோம். துறை ஆசிரியர்களது ஆலோசனையுடன் ஹெலிகாப்டரை உருவாக்கினோம். கல்லூரி நிர்வாகத்தினரும் நிதி உதவி செய்தனர்" என்றார். கல்லூரி சேர்மன் இ.பி.ஜனார்த்தனன், கோவை ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன், கல்லூரி துணை சேர்மன் பாபுராஜ், மேனேஜிங் டிரஸ்டி சந்திரன், முதல்வர் ராஜப்பன் ஆகியோர், மாணவர்களை பாராட்டினர். ஹெலிகாப்டர், பொதுமக்கள் பார்வைக்காக கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.