உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

திருச்சி: தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தில், திருச்சியில் மீட்கப்பட்ட மூன்று பெண் குழந்தைகள், 10ம் வகுப்புதேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் வயது அடிப்படையில் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதில், திருச்சி கி.அ.பெ., பள்ளியில் படித்த, முத்துலட்சுமி, 454 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கட்டட வேலை செய்யும் தனலட்சுமி என்பவரின் மகளான இவர், வணிகவியல் படிக்க விரும்புகிறார். திருச்சி ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்த ப்ரியதர்ஷினி, 451 மதிப்பெண் எடுத்து, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வீட்டு வேலை செய்து வரும் துர்க்காதேவி என்பவரின் மகளான இவர், கணினி அறிவியல் படிக்கப் போவதாக தெரிவித்தார். காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த யாஷ்மி என்ற மாணவி, 421 மதிப்பெண் எடுத்து, மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். பாத்திர வியாபாரம் செய்யும் அப்துல் மஜீத் என்பவரின் மகளான இவர், உயிரியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கப் போவதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்