நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 100 சதவீதம் சரியானவர்களா?
சென்னை: 'நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 100 சதவீதம் சரியானவர்கள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது. தேர்தல் கமிஷன் எங்களை குறிவைத்து, இடமாற்றம் செய்கிறது' என, 'குரூப் - 1' போலீஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.சட்டசபை தேர்தலையொட்டி, மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் பணியிட மாற்றம் செய்து வருகிறது.ஆளுங்கட்சிக்கு சாதகமான அதிகாரிகள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், எஸ்.பி.,க்கள் கரூர் - ஜோஸ்தங்கையா, ஈரோடு - அனிதா, நாகப்பட்டினம் - பாலகிருஷ்ணன், விருதுநகர் - கண்ணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அதன் பின், காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், பெரம்பலுார் எஸ்.பி., அனிதா, தஞ்சாவூர் எஸ்.பி., ராஜாராம், தென்காசி எஸ்.பி., மாதவன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இவர்கள், டி.என்.பி.எஸ்.சி., எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் -1' தேர்வில், டி.எஸ்.பி.,களாக தேர்வு செய்யப்பட்டு, பதவி உயர்வுகளுக்கு பின், மாவட்ட எஸ்.பி.,க்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.இவர்களுக்கு பதிலாக, தற்போது தேர்தல் கமிஷன், மாவட்ட எஸ்.பி.,க்களாக நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நியமித்துள்ளது. இது 'குரூப் -1' போலீஸ் அதிகாரிகளிடம், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவர் என, குரூப் - 1 போலீஸ் அதிகாரிகள் மீது, திட்டமிட்டு அவதுாறான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன.இதன் வழியே, நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 100 சதவீதம் சரியானவர்கள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது.இதை நம்பி, தேர்தல் கமிஷன் 'குரூப் -1' போலீஸ் அதிகாரிகளை குறி வைத்து, பணியிட மாற்றம் செய்வதுடன், எங்களுக்கு புதிய பணியிடத்தை ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைப்பது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.