பாரதியார் பல்கலை ஊழல் 12 பேர் மீது வழக்கு பதிவு
கோவை: பாரதியார் பல்கலையில், 2016ம் ஆண்டில் கம்ப்யூட்டர் கொள்முதலில் பெரிய அளவில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில், முன்னாள் பதிவாளர்கள் இருவர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் உட்பட, 12 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்,வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், நேற்று உயர்கல்வித்துறை செயலர் கார்த்தி தலைமையில் நடந்தது.இதில், கம்ப்யூட்டர் கொள்முதல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, வழக்கு பதிவு செய்வது குறித்தும், சம்பந்தப்பட்டவர்கள் தற்போது என்னென்ன பொறுப்புகளில் உள்ளனர் என்பது குறித்தும், விசாரணை நடந்தது.பல்கலையில் நீடிக்கும் காலியிடங்கள் தொடர்பாகவும், சிண்டிகேட் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அரசு அறிவுறுத்தலின்படி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய, சிண்டிகேட் குழு சார்பில், ஒப்புதல் வழங்கப்பட்டது.அதன்படி, கொள்முதல் செயல்பாடுகளில் ஈடுபட்ட அனைவரும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது. இதில், முன்னாள் பதிவாளர் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற இருவர், முன்னாள் கம்ப்யூட்டர் துறை தலைவர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர், துறைத்தலைவர் என 12 பேர் சிக்கியுள்ளனர்.