உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 1.5 கோடியில் புத்தக பைகள்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புத்தகப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள் வழங்கப்படுமென மேயர் மா.சுப்ரமணியன் அறிவித்தார். அதன்படி முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 130 ரூபாய் மதிப்பிலும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 140 மற்றும் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 175 ரூபாய் மதிப்பிலும் புத்தகப் பைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ஒரு கோடியே 58 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவில் ஒப்பந்த அடிப்படையில் பைகள் வாங்கி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் 500க்கு 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 1,000 ரூபாய், பிளஸ் 2 வகுப்பில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 1,000 ரூபாய் என்ற வகையில் ஊக்கப்பரிசாக வழங்க மாநகராட்சி மன்றத்தில் அனுமதி பெறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்