அனுமதி பெறாமல் பி.இ. 2ம் ஆண்டு சேர்க்கை
டிப்ளமோ அல்லது தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்தவர்கள் பொறியியல் படிப்புகளில் 2ம் ஆண்டுக்கு நேரடியாக சேர்க்கப்படுவார்கள். இதற்காக ஆண்டு தோறும் காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் முழு அனுமதி பெற்று கலந்தாய்வு நடைபெற்று மாணவ சேர்க்கை நடைபெறும். இந்த கல்வியாண்டுக்கான மாணவ சேர்க்கை கடந்த ஜுலை மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், 17 தனியார் பொறியியல் கல்லூரிகள் அனுமதி பெறாமல் 2ம் ஆண்டு பி.இ. மாணவ சேர்க்கையை செய்துள்ளது. இதுவரையிலும் அனுமதி கோரவில்லை என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் நவம்பர் மாதம் நடைபெற உள்ள முதல் பருவத் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்திடம் முறையான அனுமதி பெற்று, அதற்கான அத்தாட்சியை அக்டோபர் 19ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு அக்டோபர் 19ம் தேதிக்குள் அனுமதி பெற்று அத்தாட்சியை அனுப்பவில்லை எனில், அந்த கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை நவம்பரில் நடைபெற உள்ள எழுத்து மற்றும் செயல்முறைத் தேர்வுகளில் அனுமதிக்க முடியாது எனவும் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.