பரமக்குடியில் டெங்கு காய்ச்சலால் 2 மாணவர்கள் பாதிப்பு
பரமக்குடி: பரமக்குடியில்’டெங்கு’ காய்ச்சல் பரவுகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள மாதவன் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் திவாகர், 8. தனியார் பள்ளியின் 4 ம் வகுப்பு மாணவர். 4 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திவாகரை, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் மதுரை, கீழ்மதுரை சி.எம்.ஆர்., ரோட்டைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சந்தோஷ், 6, அங்குள்ள பள்ளியில் 1 ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், தாயார் சரஸ்வதியுடன் பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். மாணவர்கள் திவாகர், சந்தோஷ் ஆகியோரை பரமக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்ததில், ’டெங்கு’ காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.